மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 14 ஆக 2020

ராட்சசி படத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்!

ராட்சசி படத்திற்கு ஆசிரியர் சங்கம் கண்டனம்!

அரசு பள்ளிகளையும், அரசு ஆசிரியர்களையும் ராட்சசி படம் தவறாக சித்தரிப்பதாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இவ்விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் இன்று (ஜூலை 12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜோதிகா நடிப்பில் ஜூலை 5ஆம் தேதியன்று வெளியான ராட்சசி திரைப்படம் அரசுப் பள்ளிகளை சீர்திருத்துவதாகக் கூறிக்கொண்டு சேற்றை வாரிப்பூசுகிறது. அரசுப் பள்ளிகளை கேவலப்படுத்தும் நோக்கத்தோடும், அரசுப் பள்ளி ஆசிரியர்களை அசிங்கப்படுத்தி அவதூறு பரப்பும் வகையிலும் இந்தப் படம் அமைந்துள்ளது.

முற்போக்கு போர்வையில் போலியான விளம்பரம் மூலம் வியாபாரம் தேடும் முயற்சியே ராட்சசி திரைப்படம் அரசுப் பள்ளிகள் குப்பை, அங்கு வேலைசெய்யும் ஆசிரியர்கள் எப்போது வருவார்கள் எப்போது போவார்கள் என்று தெரியாது, ஆசிரியர்கள் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவார்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபடுகிறார்கள் என தவறான வசனங்கள் இப்படத்தில் உள்ளன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளையும், ஆசிரியர்களையும் இழிவுபடுத்தி பெற்றோர் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் தவறான கருத்துகளை பதிவு செய்தால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க எப்படி முன்வருவார்கள்?

இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவிக்கும் முயற்சியே. ஆசிரியர்களின் உரிமை போராட்டங்களை ஒடுக்கி ஜனநாயகத்தின் குரல்வளையை அறுப்பதாக வசனங்களை இயக்குநர் கவுதம்ராஜ், பாரதிநம்பி புனைந்திருக்கிறார்கள். கல்வியின் தரம் குறித்து அரசுக்கு ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் கோரிக்கை வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன என்பதை அறியாமல் எதுவுமே தெரியாமல் போலி முற்போக்குக்கு ஏன் ஆசிரியர்களை அசிங்கப்படுத்துகிறீர்கள்?

கல்வித்துறையை கொஞ்சம் கொஞ்சமாக தனியார் மயமாக்குவதற்கு வக்காலத்து வாங்கும் வகையில் இப்படம் உள்ளது. ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக ராட்சசி ஜோதிகாவும், சாட்டை சமுத்திரக்கனியும் முனைவது வரவேற்புக்குரியது. அதே நேரத்தில் ஒரு ஆசிரியரை உயர்வாகக் காட்டி ஒட்டுமொத்த அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்கள் மீது சேற்றைவாரி இறைப்பது எவ்விதத்தில் நியாயம்?

எல்லா மனிதர்களையும் போலவே இந்த அமைப்பிற்குள் சில ஆசிரியர்களும் விதிவிலக்காக தங்கள் கடமையை சரிவர செய்யாமல் இருக்கலாம். அதை கண்டிக்க வேண்டியது மறுப்பதற்கில்லை. ஆனால் அமைப்பின் சீரழிவிற்கு ஆசிரியர்கள்தான் காரணம் என்பதுபோல படம் முழுவதும் காட்டப்படுவது கண்டனத்திற்குரியது. சுமார் 50,000 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதுவொரு மிகப்பெரிய அமைப்பு. குறிப்பாக, அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அடுத்தவேளை உணவுக்காக போராடும் பெற்றோரின் குழந்தைகள். பெற்றோர்களே இல்லாத குழந்தைகள், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குழந்தைகள், முறையாக உணவு உடை இருப்பிடம் இல்லாதவர்களின் குழந்தைகள் பெரும்பாலும் அரசுப் பள்ளியில் படிக்கின்றனர்.

இதே குழந்தைகளை அரசுப் பொதுத்தேர்வுகளில் 490/500 மதிப்பெண் எடுக்கச்செய்வது அரசு ஆசிரியர்களே. ஆசிரியர் பணி அறப்பணி அதை அர்ப்பணி என்ற விதத்தில் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். முறையான அங்கீகாரமின்றி இயங்கிய தனியார் பள்ளியில் 94 குழந்தைகள் தீயில் கருகியதை இனி நடக்காமல் தடுத்திட இரக்கமுள்ள எந்த இயக்குநரும் படம் எடுக்க வரவில்லை. இப்போதும் 2000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் அங்கீகாரமின்றி இயங்கி வருகிறதே. மருந்துக்குக்கூட அதுபற்றி படத்தில் வசனமில்லை.

முற்போக்கு சிந்தனை படைத்த இயக்குநர் கல்வியினை அரசே ஏற்று நடத்த வேண்டும் என ஏன் வலியுறுத்தவில்லை? அரசுப் பள்ளியின் கல்வித்தரமும் ஆசிரியர்களின் அறப்பணியும் நேரில் சென்று பார்த்தால் தெளிவாகப்புரியும். அரசுப் பள்ளிகளை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள ராட்சசி படத்தினை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?

நாங்கள் 150 பேர் எழுந்து நின்றால்: ஜெகன் ஆவேசம்!

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடிக்கு டெல்லி போட்டுத் தந்த ப்ளான்!

ஏ.எல்.விஜய் திருமணக் கொண்டாட்டம்!!

அத்திவரதரை தரிசித்த விஜயகாந்த்


வெள்ளி, 12 ஜூலை 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon