செட்டிநாடு என்றாலே நாவிற்கினிய உணவு வகைகளைக் கொண்டது என்பதை யாரும் மறக்க முடியாது. அதேபோல் உணவுகளின் பெயர்களும் அதன் தன்மையைக் கொண்டிருக்கும். ‘கெட்டிக் குழம்பு’ நீர்க்க இல்லாமல் கெட்டியாக இருப்பதால்தான் அதற்கு அந்தப் பெயர். இதில் காரம் சற்றுத் தூக்கலாக இருக்கும். அதனால், சாதத்தில் கொஞ்சமாகச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். இளங்குழம்பில் கொஞ்சமாகப் பயறு அல்லது பருப்பு சேர்த்துச் செய்வதால், அது சாம்பார் போன்று கெட்டியாகவும் இருக்காது; ரசம் அளவுக்கு நீர்த்தும் இருக்காது. ருசியோ குழம்பு போலவே இருக்கும். அதனால்தான் ‘இளங்குழம்பு’ என்று பெயர். இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.
என்ன தேவை?
தட்டைப்பயறு - ஒரு கப்
சின்ன வெங்காயம் – 10
தக்காளி - ஒன்று
பூண்டு - 4 பல்
சாம்பார் பொடி - ஒரு டேபிள்ஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்)
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, சீரகம், உளுந்து – தலா அரை டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எப்படிச் செய்வது?
தட்டைப்பயற்றை வெறும் வாணலியில் நன்கு வாசனை வரும் வரை மிதமான சூட்டில் வறுத்து, குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வேகவைத்த தட்டைப்பயறு, புளிக்கரைசல், உப்பு, சாம்பார் பொடி, 2 கப் தண்ணீர் ஊற்றி, பூண்டை தட்டிப்போட்டுக் கொதிக்கவிடவும். பருப்பு நன்கு வெந்ததும் மற்றொரு வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு, தாளிப்புப் பொருட்களைத் தாளித்து, கொதிக்கும் இளங்குழம்பில் சேர்த்து, கொதிக்கவைத்து கொத்தமல்லித்தழையைக் கிள்ளிப் போட்டு இறக்கவும்.
என்ன பயன்?
தட்டைப்பயறு, அதிகம் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. எனவே செரிமானத் தன்மையை மேம்படுத்துவதுடன் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட செரிமானப் பிரச்சினைகளையும் போக்குகிறது. தூக்கக் குறைபாடு உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.
நேற்றைய ரெசிப்பி: காய்கறி பிரட்டல்
மேலும் படிக்க
கதிர் ஆனந்துக்கு இளைஞரணியில் பதவி?
கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷா விழா- ரஜினி வந்தது எப்படி?