மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர் மாநாடு!

ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர் மாநாடு!

ஜம்மு காஷ்மீரில் அதிக முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அக்டோபர் 12ஆம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்ததோடு, லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன் பின்னர் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது ஜம்மு காஷ்மீரில் தொழில் தொடங்க முதலீடு செய்ய முன்வரவேண்டும் என்று தொழில் துறையினருக்குக் கோரிக்கை விடுத்தார். சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதால் காஷ்மீரில் முதலீடுகள் குவியும் எனவும், இளைஞர்கள் அதிகமான வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் பேசியிருந்தார். அதன் விளைவாக முகேஷ் அம்பானி உள்ளிட்ட தொழிலதிபர்கள் பலர் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் உலக நாடுகளிடமிருந்து அதிக முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்தில் முதலீட்டாளர் மாநாடு நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் 12 முதல் 14ஆம் தேதி வரையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருப்பதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.கே.சவுதரி தெரிவித்துள்ளார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா அக்டோபர் 12ஆம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் குறைந்தது 8 நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon