மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 7 டிச 2019

காலநிலை மாற்றம்: தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்!

காலநிலை மாற்றம்: தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்!

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் குறித்து விளக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (ஆகஸ்ட் 14) வலியுறுத்தியுள்ளார்.

இன்றைய நிலையில் உலகிற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய ஆபத்து காலநிலை மாறுதல் ஆகும். காலநிலை மாற்றம் காரணமாக 2050ஆம் ஆண்டுக்குள் புவிவெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும். அதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், “காலநிலை மாற்றத்தின் தீயவிளைவுகள் பற்றி ஒவ்வொரு நாளும் வெளியாகி வரும் புதிய தகவல்கள் பதைபதைக்க வைக்கின்றன. காலநிலை மாற்றத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு அரிசி, கோதுமை, சோளம், சோயா ஆகிய நான்கு முக்கிய உணவு தானியங்களின் உற்பத்தி மிகப்பெரிய அளவில் குறையும். 2050ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கக் கண்டத்தில் மட்டும் 60 கோடி பேர் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவார்கள். இந்தியா உள்ளிட்ட பிற நாடுகளிலும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. ஒருபுறம் உணவு பற்றாக்குறை ஏற்படும் நிலையில், கடுமையான உடல்நல பாதிப்புகளும் உருவாகும். மிக மோசமான காலநிலைகள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு வகையான நோய்களும் ஏற்படும். காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளால் மோதல்கள், வன்முறைகள், உள்நாட்டுக் கலகம், போர் போன்றவை கூட ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

”காலநிலை மாற்றத்தின் விளைவாக கடல்நீர்மட்டம் உயருவதால் சிறு தீவுகள் மூழ்கக்கூடும். விளைநிலங்கள் பாழாகக்கூடும் என்பன உள்ளிட்ட ஆபத்துகள் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கின்றன. தொழில்கள், உட்கட்டமைப்புகள், வாழ்வாதாரங்கள் ஆகியவையும் பின்னடைவைச் சந்திக்கக்கூடும் என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். அவற்றுக்கான அறிகுறிகள் இப்போதே தென்படத் தொடங்கிவிட்டன. கேரளத்திலும், கர்நாடகத்திலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்திலுள்ள அவலாஞ்சியிலும் கடந்த ஒரு வாரமாக வரலாறு காணாத மழை பெய்து பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. மற்றொருபுறம் தமிழ்நாடு உட்பட உலகம் முழுவதும் வெப்பநிலையும், வறட்சியும் அதிகரித்திருக்கிறது.

இவற்றைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உலக அளவில் ஐக்கிய நாடுகள் அவையும், வேறு சில பன்னாட்டு அமைப்புகளும், பல்வேறு நாடுகளின் அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளை தடுப்பதற்கான கடமையும், பொறுப்பும் அரசுகளுக்கும், பன்னாட்டு அமைப்புகளுக்கு மட்டும் தான் இருப்பதாக நினைக்கக்கூடாது. அரசுகளுக்கு இணையான கடமை மக்களுக்கும் உள்ளது. பூமியிலிருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவை குறைப்பதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மின்னியல் பொருட்களின் பயன்பாட்டைக் குறைத்தல், பொதுப் போக்குவரத்தை அதிகரித்தல், பயன்படுத்திய பொருட்களைக் குப்பையில் வீசுவதற்கு மாற்றாக மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல், பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்தல், மாமிசம் உண்பதைக் குறைத்தல் உள்ளிட்டவற்றை கடைப்பிடிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த மக்கள் உதவ முடியும்.

ஆனால், இதுதொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் வேகம் போதாது. இந்தப் பணிகளை விரைவு படுத்த போர்க்காலச் சூழலை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத் தான் ஐ.நா. நிலையிலிருந்து கிராம ஊராட்சிகள் வரை அனைத்து நிலைகளிலும் காலநிலை மாற்ற அவசர நிலையை பிரகடனப்படுத்த வேண்டும். இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் நாடாளுமன்றங்களிலும், லண்டன், பாரிஸ், நியூயார்க், சிட்னி உள்ளிட்ட பெருநகரங்களின் மாநகர அவைகளிலும் கடந்த ஓராண்டில் காலநிலைமாற்ற அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவிலும் மத்திய அரசு நிலையிலிருந்து உள்ளாட்சிகள் வரை இதே பிரகடனம் நிறைவேற்றப்பட வேண்டும்.

எனவே, மத்திய, மாநில அரசுகள் காலநிலை மாற்ற அவசர நிலையைப் பிரகடனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon