மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

நீலகிரி பாதிப்பு: 6 மாதங்களில் புதிய வீடுகள்!

நீலகிரி பாதிப்பு: 6 மாதங்களில் புதிய வீடுகள்!

நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ.199.23 கோடி தேவை என்று கூறியுள்ள துணை முதல்வர் பன்னீர் செல்வம், வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறு மாதங்களில் புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகக் கனமழை காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி வீடுகளையும் உடைமைகளையும் இழந்த 5,000க்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. வெள்ள பாதிப்புகளைப் பார்வையிட தமிழகத் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று (ஆகஸ்ட் 13) நீலகிரி சென்றிருந்தார்.

நேற்று காலையில் மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு புறப்பட்டு சென்ற பன்னீர் செல்வத்துடன் அமைச்சர் உடுமலை ராதா கிருஷ்ணன், தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், ஏ.கே.செல்வராஜ் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஓ.கே.சின்ன ராஜ், சாந்திராமு ஆகியோர் சென்றனர். பின்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலோசனைக்குப் பின்னர், கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நீலகிரி மாவட்டத்தின் மறு சீரமைப்புக்கு ரூ.199.23 கோடி தேவை என அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஆகஸ்ட் 13) இரவு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நீலகிரி மாவட்டத்தில் அளவுக்கு அதிகமான மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மூன்று மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, மூன்று நாட்களில் பெய்ததால்தான் இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக அளவுக்கு அதிகமாக மழைபெய்தாலும் உயர் பாதிப்புகள் எதுவும் இல்லாத ஒரு சூழ்நிலையை மாவட்ட நிர்வாகம் உருவாக்கியிருக்கிறது. அனைத்து பணிகளிலும் ஈடுபட்டிருந்த கலெக்டர் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் அரசின் சார்பாக நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இங்கு பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளில் நேரடியாகச் சென்று அதனுடைய பாதிப்புகளை பார்வையிட்டு மக்களுக்கு என்னென்ன தேவை, தற்காலிகமாக என்ன தேவை, நிரந்தரமாக என்ன தேவை என்று கணக்கிட்டு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில், பகுதியாக சேதமடைந்த வீடுகளுக்கு 15 நாட்களில் தற்காலிக குடியிருப்புகளும், வீடுகளை முழுமையாக இழந்த மக்களுக்கு 6 மாதங்களில் புதிய வீடுகளும் கட்டித் தரப்படும்” என்று உறுதியளித்தார்.

மேலும், ”500 ஏக்கர் பரப்பிலான பயிர்கள், 150 கிலோ மீட்டர் சாலைகள் மற்றும் மூன்றரை கிலோ மீட்டர் மின் பாதைகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தின் மறுசீரமைப்புப் பணிக்கு ரூ.199.23 கோடி தேவைப்படுகிறது. இதுகுறித்த ஆய்வறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும்” என்றார்.


மேலும் படிக்க


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


மோடியையும் விட்டுவைக்காத தமிழ் ராக்கர்ஸ்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon