மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

காஷ்மீர்: ஆளுநர்-ராகுல் மோதல்!

காஷ்மீர்: ஆளுநர்-ராகுல் மோதல்!

காஷ்மீருக்கு தான் எப்போது வர வேண்டும் என்று ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வினா எழுப்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370ஆவது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படை மற்றும் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனிடையே மத்திய அரசை எதிர்த்து போராடும் காஷ்மீர் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவது போன்ற வீடியோ ஒன்றை பிபிசி வெளியிட்டது. இதுதொடர்பாக பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், காஷ்மீரிலிருந்து வரும் தகவல்கள் கவலையளிப்பதாகவும் இதுதொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக், ராகுலுக்கு தனியாக விமானம் அனுப்புவதாகவும், அவர் காஷ்மீருக்கு வந்து உண்மை நிலையை பார்த்த பிறகு பேச வேண்டும் எனவும் தெரிவித்தார். இந்த அழைப்பை உடனடியாக ஏற்ற ராகுல், “விமானம் வேண்டாம், பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சுதந்திரமாக சந்திக்க அனுமதியுங்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த சூழலில் திடீர் திருப்பமாக காஷ்மீர் வருவதற்கு ராகுலுக்கு விடுத்த அழைப்பை இன்று (ஆகஸ்ட் 14) திரும்பப் பெற்றுள்ளார் காஷ்மீர் ஆளுநர் சத்ய பால் மாலிக். இதுதொடர்பாக ஜம்மு காஷ்மீர் ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித் தலைவர்களின் குழுவையும் அழைக்க வேண்டுமென கூறி இந்த விவகாரத்தை ராகுல் காந்தி அரசியலாக்குகிறார். காஷ்மீர் மக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துகிறார். காஷ்மீர் வருவதற்கு அவர் பல்வேறு நிபந்தனைகளையும் முன்வைப்பதால் இந்த விவகாரத்தை உள்ளூர் காவல் துறை மற்றும் நிர்வாகத்திற்கு அனுப்புகிறோம்” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “அன்புள்ள மாலிக் அவர்களே... எனது ட்விட்டுக்கு உங்களின் பலவீனமான பதிலைப் பார்த்தேன். உங்களின் அழைப்பை ஏற்று ஜம்மு காஷ்மீருக்கு வந்து அங்குள்ள மக்களை சந்திக்க நான் தயாராகவே இருக்கிறேன். அதற்காக எந்தவித நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. எப்போது நான் காஷ்மீருக்கு வர வேண்டும்” என்று மீண்டும் வினா எழுப்பியுள்ளார். இவ்வாறாக ஆளுநர் மாலிக்-ராகுல் காந்தி இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon