மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

அம்மா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன்: கருணாஸ்

அம்மா இருந்திருந்தால் அமைச்சர் ஆகியிருப்பேன்: கருணாஸ்

ஜெயலலிதா இருந்திருந்தால் தனக்கு அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நடிகர் கருணாஸ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இன்று (ஆகஸ்ட் 14) வருகை தந்தார். அங்கு ஆட்சியர் வீரராகவ ராவை சந்தித்து, தனது தொகுதியில் நடைபெறும் குடிமராமத்து பணிகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதாக புகார் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸிடம், அமைச்சர் பதவியிலிருந்து மணிகண்டன் நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு கருணாஸ், “அமைச்சராக இருந்த மணிகண்டன் குறித்து முதல்முதலாக வெளிப்படையாக புகார் தெரிவித்தது நான்தான். அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. என்னுடைய தொகுதியில் அவருடைய தலையீடு அதிகமாக இருந்தது. அதனால் என்னால் தொகுதிப் பணிகளை செய்யமுடியவில்லை. நல்ல திட்டங்களையும் கொண்டுவர முடியவில்லை. அவரைப் பற்றிய குற்றச்சாட்டுகளை முதல்வரிடத்தில் முன்வைத்தவன் நான் தான். அதற்காக என்னால்தான் அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவரை நீக்கியதற்கான காரணம் ஏற்கனவே வெளிவந்துவிட்டது. அவர் நீக்கப்பட்டதற்கு நானும் ஒரு காரணமாக இருக்கலாம்” என்று பதிலளித்தார்.

முன்னதாக எம்.எல்.ஏ கருணாஸுக்கும், அமைச்சராக இருந்த மணிகண்டனுக்கும் தொடர்ந்து மோதல் இருந்துவந்தது. தனது பணியை செய்யவிடாமல் மணிகண்டன் குறுக்கிடுவதாக கருணாஸ் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தார். அவரை அமைச்சர் மணிகண்டனும் விமர்சித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் சந்திப்பில் மேலும் பேசிய கருணாஸ், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே எனக்கு அமைச்சர் பதவி தருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், அதற்குள் அவர் மறைந்துவிட்டார். எனக்கு எம்.எல்.ஏ பதவி போதும். பதவிகள் வரும்போது பணிவுடன் இருக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon