மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

அரசை செயல்பட வைப்பது திமுகதான்: ஸ்டாலின்

அரசை செயல்பட வைப்பது திமுகதான்: ஸ்டாலின்

செயல்படாமல் இருக்கும் ஆளுங்கட்சியை ஓரளவு செயல்பட வைக்க திமுக துணை நிற்கிறது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கனமழை பெய்துவருவதால் அங்கு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கும் வகையில் ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட திமுகவின் சார்பில் ரூ.82 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் இன்று (ஆகஸ்ட் 14) கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் நிவாரணப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் லாரியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலினிடம், நீலகிரி மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு மேற்கொள்ளாமல் இருக்கிறார். அமைச்சர்களும் சரிவர ஆய்வுசெய்யவில்லையே என்ற கேள்விக்கு, “ஏன் ஆய்வு செய்யவில்லை என்று முதல்வரிடம் கேள்வி எழுப்புங்கள். முதல்வர் அமெரிக்கா, லண்டனுக்கெல்லாம் செல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். அந்த ஏற்பாடுகளில் இருப்பதனால் நீலகிரிக்கெல்லாம் அவருக்கு செல்ல நேரம் இருக்காது” என்று பதிலளித்தார்.

முன்னதாக திமுக எம்.பி.க்கள் சார்பில் நிதியளிக்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்தது குறித்து விமர்சித்திருந்த முதல்வர், “திமுக ரூ.10 கோடி நிவாரணம் அளிக்கும் என்று கூறவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் நிதிகளின் மூலம் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றுதான் கூறியிருக்கிறது. ரூ.10 கோடியை வைத்துக்கொண்டு என்ன பணிகளை மேற்கொள்ள முடியும்” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த ஸ்டாலின், “திமுக அளிக்கும் நிதி ஸ்டாலின் ஏதோ தனிப்பட்ட முறையில் அளிக்கும் நிதி அல்ல. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி அது. அந்த நிதியைத்தான் 10 கோடி என்று கணக்கிட்டு சொன்னேன். தற்போது அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்போகிறார்கள். அது என்ன எடப்பாடி பழனிசாமி தனது பாக்கெட்டிலிருந்தா எடுத்துக் கொடுக்கிறார். அது மக்களின் வரிப்பணம். மக்களின் வரிப்பணத்தில்தான் இந்த அரசு இயங்கிக் கொண்டிருக்கிறது. இதுதான் என்னுடைய பதில்” என்று கூறினார்.

நீங்கள்தான் நீலகிரியில் முதல்முதலாக பார்வையிட்டீர்கள். ஆனால் அதனை விளம்பரம் என ஆளுங்கட்சியினர் விமர்சனம் செய்கிறார்களே என்ற கேள்விக்கு, “அதற்கெல்லாம் நான் கவலைப்படவில்லை. ஆளுங்கட்சி இன்றைக்கு செயல்படாமல் இருந்துவருகிறது. ஓரளவு செயல்பட வைப்பதற்கு திமுகதான் துணை நிற்கிறது” என்றும் தெரிவித்தார் ஸ்டாலின்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon