மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

தனித்து விடப்பட்ட சிக்கிம் முதல்வர்!

தனித்து விடப்பட்ட சிக்கிம் முதல்வர்!

இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சி செய்த முதல்வர் என அறியப்படும், பவன் குமார் சாம்லிங் இப்போது தனது கட்சியில் ஒரே எம்.எல்.ஏ.-வாக தனித்து விடப்பட்டுள்ளார்.

1975-ஆம் ஆண்டு, இந்தியாவுடன் சிக்கிம் இணைக்கப்பட்ட பின், ஐந்தாவது முதலமைச்சராக பதவியேற்றவர் பவன் குமார் சாம்லிங். 1994 ஆம் ஆண்டுமுதல் நான்கு முறை 1994, 1999, 2004, 2009, 2014 தேர்தல்களில் வென்று தொடர்ந்து 25ஆண்டு காலம் ஆட்சி அமைத்துள்ளார் பவன் குமார். இந்தியாவில் அதிக காலம் ஆட்சி அமைத்த முதல்வராவார் பவன் குமார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் சிக்கிம் கிரந்திகாரி மோர்ச்சா தலைவர் பிரேம் சிங் தமங் வென்றதன் மூலம் இவரது நீண்ட கால ஆட்சிக்கு முடிவுக்கு வந்தது.

32 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட சிக்கிம் மாநிலத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 17 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. பவன் குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களில் 2 பேர் இரண்டு தொகுதிகளில் வென்றதால் தலா ஓரிடத்தை ராஜினாமா செய்தனர். இதனால் அந்த கட்சியின் பலம் 13 ஆக குறைந்தது.

இதனிடையே, நேற்று (ஆக.13) பவன் குமார் சாம்லிங் கட்சியைச் சேர்ந்த 10 எம்.எல்.ஏக்கள் பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் ராம் மாதவ் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் முன்னாள் சிக்கிம் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கிற்கு எதிர்கட்சி அந்தஸ்தை இழக்கும் நெருக்கடி நிலை ஏற்பட்டது. இவரது கட்சியில் இவரையும் சேர்த்து மூன்று எம்.எல்.ஏக்கள் மட்டுமே இருந்தனர்.

இந்நிலையில், பவன் சாம்லிங் கட்சியைச் சேர்ந்த ஜி.டி. துங்கல், பிரசாத் சர்மா ஆகிய இருவரும் இன்று ஆளுங்கட்சியான கிராந்திகாரி மோர்ச்சா கட்சியில் இணைந்துள்ளதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே பவன் சாம்லிங் தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இம்முடிவுக்கு வந்துள்ளனர்.

பவன் குமார் சாம்லிங் கட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஒரு எம்.எல்.ஏ(பவன்)வுடன் தனித்து விடப்பட்டுள்ளது. தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாத பா.ஜ.க 10 எம்.எல்.ஏக்களுடன் எதிர்கட்சி நிலையை அடைந்துள்ளது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon