மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 14 ஆக 2019

கமல் கட்சியில் புதிய மாற்றம்!

கமல் கட்சியில் புதிய மாற்றம்!

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைத்துள்ளார் கமல்ஹாசன்.

நடிகர் கமல்ஹாசன், 2018 பிப்ரவரி 21ஆம் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியைத் துவங்கினார். கட்சியில் முதற்கட்ட நிர்வாகிகள் பட்டியல் அந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. தலைவராக கமல்ஹாசனும், துணைத் தலைவராக பட்டிமன்ற நடுவர் கு.ஞானசம்பந்தமும், பொதுச் செயலாளராக அருணாச்சலமும், பொருளாளராக சுரேஷும் இவர்களோடு 9 பேர் கொண்ட செயற்குழு உறுப்பினர்களும் அறிவிக்கப்பட்டனர். அதனையடுத்து, சில மாதங்களில் துணைத் தலைவராக மகேந்திரன் நியமிக்கப்பட்டார்.

அண்மையில் நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் முதன்முறையாகப் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம், கனிசமான வாக்குகளைப் பெற்றது. பல இடங்களில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இந்த நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கட்சியை வலுப்படுத்த முடிவு செய்தார் கமல்ஹாசன்.

இதுதொடர்பாக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோருடன் மக்கள் நீதி மய்யம் ஒப்பந்தம் செய்துகொண்டிருக்கிறது என்றும், அவருடைய குழுவின் ஆலோசனையில் பேரில் கட்சியின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்படவுள்ளது என்றும் நாம் ஜூலை 27ஆம் தேதி வெளியிட்ட டிஜிட்டல் திண்ணையில் பதிவு செய்திருந்தோம்.

இந்த சூழலில் கட்சியை நிர்வாக ரீதியாக மாற்றி அமைத்துள்ளார் கமல்ஹாசன். இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 14) அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக அரசியல் என்பது மக்கள் நலனை விட்டு விலகியும், சுயநலம் மிக்கதாகவும், தரம் தாழ்ந்தும் தனது பாரம்பரிய பெருமையை இழந்து நின்ற சூழலில் அரசியல் நாகரீகத்தை மீட்டெடுக்கவும் மீண்டும் மக்களுக்காக பாடுபடும் ஒரு கட்சியினை உருவாக்கிட வேண்டும் என்ற எண்ணத்தினாலும் உருவாக்கப்பட்டது மக்கள் நீதி மய்யம்.

அதன் காரணமாக கட்சி ஆரம்பித்த 14 மாதங்களில் மக்களவைத் தேர்தலை துணிவுடன் சந்தித்தோம். அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொள்ளும் வகையில் பெரும் ஆதரவை மக்கள் அளித்தனர். அந்த ஆதரவை அதிகப்படுத்தி 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் மக்கள் நலன் விரும்பும் ஒரு நல்லாட்சி அமைத்திட, உத்வேகத்துடன் பாடுபட முடிவுசெய்து கட்சியை வலுப்படுத்த சில நடவடிக்கைகள் எடுப்பதற்கு விரும்பினேன். அந்த வகையில் கட்சியில் தலைவருக்கு கீழ் துணைத் தலைவர், ஆறு பொதுச் செயலாளர்கள் மற்றும் பொருளாளர் இருக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதன்படி, கட்சி அனைத்து கிராமங்களுக்கும் சென்றடையை பொதுச் செயலாளர் (அமைப்பு), வடக்கு மற்றும் கிழக்கு &தெற்கு மற்றும் மேற்கு என இரண்டு பதவிகளாக உருவாக்கப்படுவதாகவும், தமிழகத்தின் ஒவ்வொரு வாக்குச் சாவடி வரையில் கட்சியை கொண்டுசெல்ல பொதுச் செயலாளர் (ஒருங்கிணைப்பு) என்ற பதவி உருவாக்கப்படுகிறது என்றும், அத்துடன் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர், சார்பு அணிகளின் பொதுச் செயலாளர், தலைவர் அலுவலக பொதுச் செயலாளர் பதவிகளும் உருவாக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “கட்சி நிர்வாகத்தை எளிமைப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், கோவை, விழுப்புரம், திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி என 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவில் 16 மாநிலச் செயலாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்” என்றும் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

புதிய நிர்வாகிகளின் விவரம்

பொதுச் செயலாளர், ஒருங்கிணைப்பு: ஆ.அருணாச்சலம்.

பொதுச் செயலாளர், அமைப்பு (வடக்கு& கிழக்கு): ஏ.ஜி.மவுரியா ஐபிஎஸ், (ஓய்வுபெற்ற காவல் அதிகாரி).

பொதுச் செயலாளர், அமைப்பு (தெற்கு&மேற்கு): தலைவர் அலுவலகத்தின் நேரடிப் பார்வையில்.

பொதுச் செயலாளர், கொள்கை பரப்பு: ரங்கராஜன் (முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி).

பொதுச் செயலாளர், சார்பு அணிகள்: வி.உமாதேவி.

பொதுச் செயலாளர், தலைவர் அலுவலகம்: பஷீர் அகமது (ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி).

துணைத் தலைவர் மகேந்திரன் மற்றும் பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் தாங்கள் வகித்துவந்த பதவிகளில் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon