இராமானுஜம்
தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்கள் வருகின்ற போது அந்தப் படங்களின் வசூலை மிகைப்படுத்தி கூறுவது அல்லது உண்மைக்குப் புறம்பாக தகவல்களை ஊடகங்கள் மூலம் வெளிக் கொண்டுவரும் முயற்சியை தயாரிப்பாளர்கள் மேற்கொள்வார்கள்.
படத்தை பற்றிய பிம்பத்தை உருவாக்கவும் திரையரங்குகளுக்கு பார்வையாளர்களை அதிக அளவில் கொண்டுவருவதற்கான முயற்சியாக முதலில் இது கருதப்பட்டது. ஆனால் காலப்போக்கில் படம் வெளியான மூன்றாம் நாளே மாபெரும் வெற்றி என்று கூறி சக்சஸ் மீட்டை கோடம்பாக்கத்தில் தயாரிப்பாளர்கள் நடத்தத் தொடங்கினர்.
இது கிண்டல் கேலிக்கு ஆளானது உண்டு ஏனென்றால் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை 12 காட்சிகள் ஓடி முடியும் பொழுது அதன்வசூல் விவரங்களை வைத்து தீர்மானிக்க முடியாது .
இது தயாரிப்பாளருக்கும் அந்தப் படத்தில் நடித்த நடிகருக்கும் நன்றாகவே தெரியும். வெள்ளிக்கிழமை வெளியான படம் அந்த வாரத்தின் கடைசி நாளான வியாழக்கிழமை வரை தாக்குப்பிடிக்குமா அல்லது திரும்ப வந்து விடுமா என்ற பதட்டத்தில் படம் வெளியான மூன்றாவது நாளே ஒரு நிகழ்ச்சி நடத்தி விடுவார்கள்.
இது ஒரு வகையில் அந்த படத்தை பற்றிய செய்திகளை சமூகவலைதளங்களில் மீண்டும் கொண்டு சென்று விளம்பரப்படுத்த உதவியது. தயாரிப்பாளர் அல்லது அந்த படத்தின் பத்திரிகை தொடர்பாளர் தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பார். அவர்கள் மூலம் படத்தைப் பற்றிய செய்திகளை அதிகமாக டிவிட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதற்கு ஏற்பாடு செய்து கொள்வார்.
இது ஒரு தற்காலிகமான சந்தோஷத்தையும், போதையையும் இவர்களுக்கு கொடுத்து வருகிறது. ஆனால் இவற்றில் வருகின்ற புள்ளி விவரங்கள் படத்திற்கு எந்த விதமான பிரயோஜனமும் இல்லை என்பது அவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.
இந்த வருடம் வெளியான படங்களில் வசூல் ரீதியான தகவல்களில் அதிகமான சர்ச்சைகளையும் விவாதங்களையும் எதிர்கொண்டது விஸ்வாசம் படம். அதற்கு காரணம் சமூக வலைதளங்கள் மூலம் வெளியான தவறான புள்ளிவிவர தகவல்கள்.
விஸ்வாசம் வெளியான முதல் நாள் ரஜினிகாந்த் படத்தின் முதல் நாள் வசூலை முறியடித்தது வரலாறு. இதனை அஜித் குமார் எதிர்பார்க்கவில்லை என்பது தான் உண்மை.
அடுத்து வந்த நாட்களில் விஸ்வாசம் படத்தின் வசூல் சுமாராகவே இருந்தது. ஆனால் இப்படத்திற்காக புரொமோஷன் வேலைகளை செய்து வந்தவர்கள் மூன்று நாட்களில் 100 கோடி மொத்த வசூல் கடந்து விட்டது என்று கூறியது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார், சுப்ரீம் ஸ்டார், வசூல் மன்னர்கள், இளையதளபதி என ரசிகர்களும் ஊடகங்களும் குறிப்பிடக்கூடிய நடிகர்கள் எவரும் நியாயமான முறையில் அரசு நிர்ணயித்த கட்டணப்படி டிக்கெட் விற்பனை செய்தால் அவர்கள் வாங்குகின்ற சம்பள அளவு கூட தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கிடைக்காது.
நடிகர்கள் மீது வெறித்தனமாக இருக்கும் ரசிகனின் ரத்தத்தை அதிக விலையில் டிக்கட்டை விற்பனை செய்து திரையரங்குகள் உறிஞ்சிக் கொண்டிருக்கின்றன. அதனால்தான் அதிகமான வசூலானது என்று தயாரிப்பாளர்களால் கூறமுடிகிறது . இது அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும்.
விஸ்வாசம் படம் ஜனவரி 10 அன்று வந்தாலும் வசூல் ரீதியாக அந்த படம் ஜெட் வேகத்தில் பறக்கத் தொடங்கியது ஜனவரி 14ஆம் தேதிக்கு பின்னர் தான். அதனால் தான் முதல் மூன்று நாட்கள் தமிழகத்தில் 100 கோடி ரூபாயை விசுவாசம் வசூலித்தது என்று அறிவிக்கப்பட்டது விவாதத்திற்குரியதானது.
அது தமிழகத்தின் பிரதான பிரச்சினையாக கருதப்பட்டு 100 கோடி வசூல் உண்மையா என்று தொலைக்காட்சிகளில் விவாதப் பொருளாக முன்னிறுத்தப்பட்டு விவாதிக்கப்பட்டது.
இது போன்ற இலவச விளம்பரங்கள் விஸ்வாசம் படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. பேட்ட படத்தை பொறுத்தவரை தமிழகத்தில் அப்படத்தின் வருவாய் குறைவானது. ஆனால் சர்வதேச வியாபாரத்தில் 240 கோடி ரூபாய் அப்படத்தின் மூலம் வருவாயாக தயாரிப்பாளருக்கு கிடைத்தது.
விஸ்வாசம் படத்தை பொறுத்தவரை அதிகபட்ச வருவாய் தமிழகத்தை நம்பி இருந்தது. அஜித் நடித்த பெரும்பாலான படங்கள் கடந்த பத்தாண்டுகளில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி வந்திருக்கிறது.
முதல்முறையாக விஸ்வாசம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்புக்கும் அதிகபட்ச லாபத்தை கொடுத்த முதல் படமாக இருந்தது. பல திரையரங்குகள் இப்படத்தை 50 நாட்களை கடந்தும் திரையிட்டு வந்தன.
தமிழகத்தில் சுமார் 120 கோடி ரூபாய் இப்படம் வசூல் செய்தது. செலவுகள் நீங்கலாக விநியோகஸ்தர் அல்லது தயாரிப்பாளருக்கு சுமார் 85 கோடி ரூபாய் பங்குத் தொகையாக இந்த வருடத்தில் கிடைத்த முதல் படம் என்ற பெருமையை விசுவாசம் பெற்றுள்ளது.
தொடர்ந்து பேசலாம், நாளை
ரஜினியை பின்னுக்குத் தள்ளிய அஜித்
மேலும் படிக்க
நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!
வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!
எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!
கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!
அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!