மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பில் இந்தியா!

சுதந்திர தினம்: பலத்த பாதுகாப்பில் இந்தியா!

சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாடெங்கும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 73ஆவது சுதந்திர தின விழா நாளை (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றி அதிக திறன் வாய்ந்த 500 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர, குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றுகிறார். இதையொட்டி, தலைமைச் செயலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னையில் சுமார் 12,000 காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நகரம் முழுவதும் ரோந்துப் பணி மற்றும் வாகனச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை விமான நிலையத்தில் உள்ள தேசியக் கொடி வண்ணமயமான மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அங்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் குறிப்பாக, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதன் எதிரொலியாக, சுதந்திர தினத்தின் போது தீவிரவாதிகளால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காஷ்மீர் எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் கடலோரக் காவல் படையினர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லி, ஜம்மு காஷ்மீர், குஜராத், மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிர சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்துக்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். புதுச்சேரியிலும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேருந்து, ரயில் நிலையங்களில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. புதுச்சேரி எல்லைப் பகுதியிலும் கடல் பகுதியிலும் ரோந்துப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து நாட்டில் பதற்றமான சூழல் நிலவுவதால் இந்த ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு செங்கோட்டையில் இன்று முப்படையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் பங்கேற்ற ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon