மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 26 செப் 2020

நெல்லை தம்பதியர் சொல்லும் அட்வைஸ்!

நெல்லை தம்பதியர் சொல்லும் அட்வைஸ்!

எப்பொழுதும் முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று வீரத்துடன் கொள்ளையர்களை விரட்டியடித்த தம்பதியினர் பேட்டி அளித்துள்ளனர்.

நெல்லையில் தங்களது வீட்டில் கொள்ளையடிக்க வந்த இரு கொள்ளையர்களை சண்முகவேல் செந்தாமரை தம்பதியினர் விரட்டி அடித்தது அனைவரிடத்திலும் பாராட்டைப் பெற்றது. அவர்களுக்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இருவருக்கும் தமிழக அரசின் வீரதீர விருது அறிவிக்கப்பட்டது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் இருவருக்கும் வீர தீர விருதை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவுரவிக்கவுள்ளார்.

இதனை முன்னிட்டு அந்த தம்பதியினர் விமானம் மூலம் இன்று (ஆகஸ்ட் 14) மதியம் தூத்துக்குடியில் இருந்து சென்னை வந்தனர். விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்கள், ”நாங்கள் இருப்பது தனி வீடு. இதனால் எப்போதும் விழிப்புணர்வுடன் இருப்போம். அதனால் தான் அன்று எங்களால் விரைந்து செயல்பட முடிந்தது. கொள்ளையர்கள் வந்தால் தைரியமாக எதிர்க்க வேண்டும். பயப்படக்கூடாது எப்போதும் தற்காப்புடன் இருக்க வேண்டும். சம்பவம் நடைபெற்ற அன்று ஐந்து நிமிடத்தில் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தோம். 20 நிமிடத்தில் போலீசார் வந்தனர். இவ்விவகாரத்தில் காவல் துறையினர் சிறப்பாகச் செயல்பட்டனர். 70 வயதாகிறது இதுவரை காவல்துறையிடம் எதற்கும் சென்றதில்லை. வட்டாட்சியர் வந்து உங்களுக்கு விருது வழங்கப்படவுள்ளது என்று சொன்னார். இதையடுத்து சென்னை கிளம்பி வந்தோம்” என்றனர். தொடர்ந்து தலைமைச் செயலகம் சென்ற அவர்கள், அங்கு பொதுத்துறை அரசு சிறப்பு செயலாளர் மைதிலியைச் சந்தித்தனர்.

இதற்கிடையே இவர்களது வீட்டில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களைப் பிடிக்க அம்பாசமுத்திரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜாகிர் உசேன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் சம்பவம் நடந்து மூன்று நாள் ஆகிய நிலையிலும் முகமூடி கொள்ளையர்களைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

முன்னதாக, பசுமை விகடனில் "இயற்கையில் இனிக்கும் எலுமிச்சை... இரண்டரை ஏக்கர்… ஆண்டுக்கு ரூ. 7,80,000 லாபம்!" என்ற தலைப்பிட்டு அட்டைப்படத்தோடு சண்முகவேல் செந்தாமரை குறித்துக் கட்டுரை வெளியாகியிருக்கிறது. அதில், 32,500 கிலோவுக்கு எழுமிச்சை சாகுபடி செய்வதாகவும், ஒரு கிலோ எழுமிச்சையை அதிகபட்சம் ரூ.130க்கு சண்முகவேல் விற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் 11,37,500 ரூபாய் வருமானம் கிடைத்ததாகவும்.எல்லாச் செலவும் சேர்த்து 3,50,000 ரூபாய் போக, 7,87,500 ரூபாய் லாபமாகக் கிடைக்கும் என்று இருவரும் பேட்டி அளித்திருக்கின்றனர். இதன் அடிப்படையிலேயே கொள்ளையர்கள் கொள்ளையடிக்க வந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில் இந்த திருட்டு சம்பவத்துக்கும், பசுமை விகடனுக்கும் தொடர்பு இல்லை என்று அவ்விதழுக்கு நெல்லை தம்பதியினர் பேட்டி அளித்ததாகப் பசுமை விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon