மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 3 டிச 2020

டிஜிட்டல் திண்ணை: சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- கோபப்பட்ட பன்னீர்!

டிஜிட்டல் திண்ணை:    சிதம்பரத்திடம் மன்னிப்பு கேட்ட எடப்பாடி- கோபப்பட்ட பன்னீர்!

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டது. வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. வேறெந்த பேச்சும் இல்லாமல் கடகடவென செய்தியை டைப் செய்யத் தொடங்கியது.

“ஆகஸ்டு 13 ஆம் தேதி சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அணையை திறந்து வைத்த முதல்வர் அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். கோவை, சேலம் என்று சென்றாலே எடப்பாடியின் பிரஸ் மீட்டுகள் கொஞ்சம் விறுவிறுப்பு கூடித்தான் போகின்றன. அந்த வகையில் மேட்டூர் பிரஸ் மீட்டிலும் காரசாரமாகவே பேசினார் எடப்பாடி. அப்போது, காஷ்மீர் விவகாரத்தில், ‘தமிழகத்தைப் பிரித்தால் கூட அதனை அதிமுக தலை வணங்கி ஏற்கும் என்று சிதம்பரம் பேசியிருக்கிறாரே?’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதைக் கேட்டதும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ”ப.சிதம்பரம் எத்தனை ஆண்டுக் காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் நாட்டுக்கு என்ன பயன் பூமிக்குத்தான் பாரம். அவருடைய பேச்சைப் பொருட்படுத்த வேண்டியதில்லை” என்று சட்டென தெரிவித்தார் முதல்வர். பல்வேறு தொலைக்காட்சிகளில் முதல்வரின் பேட்டி நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். அடுத்த சில நிமிடங்களில் மேட்டூர் அணை திறப்பு செய்தியை விட, ‘சிதம்பரம் பூமிக்கு பாரம்’ என்று எடப்பாடி சொன்னதே செய்தித் தொலைக்காட்சிகளிலும், சமூக தளங்களிலும் பரபரப்பானது.

இதற்கு காங்கிரஸ் தரப்பில் இருந்தும் உடனடியாக ரியாக்‌ஷன் வந்தது. சிதம்பரத்தின் மகனும் எம்பியுமான கார்த்தி சிதம்பரம், ‘முதல்வர் சொல்ல வேண்டிய வாசகமா இது? அவரைப் பற்றி ஒரு வீடியோ பார்த்துள்ளேன். அதனைப் பற்றி கூற விரும்பவில்லை. 9முறை இந்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர், ஆசியாவிலேயே சிறந்த நிதியமைச்சர் என்று பட்டம் பெற்றவரைப் பற்றி சரித்திர விபத்தால் முதல்வரானவர் இப்படி சொல்லலாமா? இதுதான் அரசியல் நாகரீகமா? அவர் சாமி கும்பிடுபவர் என்று நன்றாக எனக்குத் தெரியும். சாமி கும்பிடும்போது அவருக்கு மனசாட்சி உறுத்தும்’ என்று தெரிவித்தார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியும் அறிக்கை விட்டார். ’சிதம்பரம் என்றைக்கும் பதவிகளை தேடிப் போனதே இல்லை. பதவிகள் தான் இவரை தேடி வந்திருக்கின்றன. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கு வந்தார் என்பதும், பதவிக்கு வந்த போது அவர் யார் காலில் விழுந்து விசுவாசத்தை வெளிப்படுத்தினார் என்பதும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். எனவே, எடப்பாடி அவர்களே, கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிய வேண்டாம்’ என்று எச்சரித்தார். காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர். ராமசாமியும் முதல்வரைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டனர்.

சில மணி நேரங்களுக்குப் பின்னர்தான் எடப்பாடிக்கு அந்த வார்த்தைகளின் தீவிரமே புரிந்தது. சேலத்தில் எடப்பாடியிடம் பேசிய கட்சிப் புள்ளிகள், ‘என்னண்ணே இப்படி சொல்லிட்டீங்க. ஒருத்தரை பூமிக்கு பாரமா இருக்கார்னு சொன்னா, அவர் இருக்கவே வேணாம்னுதானே அர்த்தமாகும். கிராமங்கள்ல இப்படித்தானே சொல்லுவாங்க. சிதம்பரத்தை நீங்க இப்படி பேசியிருக்க வேணாம்’ என்று கூறியுள்ளனர். அப்போது எடப்பாடி, ‘ஆமாப்பா... ஏதோ ஒரு ரைமிங்ல பேசிட்டேன். எனக்கே இப்ப ரொம்ப வருத்தமா இருக்கு’ என்று சொல்லியிருக்கிறார். பின் திடீரென தனது வலதுகரமான கூட்டுறவு இளங்கோவனைக் கூப்பிட்டு ப.சிதம்பரத்துக்கு போன் போட்டு நான் ரொம்ப வருத்தப்பட்டேன்னு சொல்லுங்க. நானே இப்ப அவர்கிட்ட பேசினா நல்லா இருக்காது. அவர் சரின்னு சொன்னா நான் பேசுறேன்னு கேட்டுப் பாருங்க’என்று சொல்லியிருக்கிறார்.

அதன்படியே ப.சிதம்பரத்தின் பர்சனல் நம்பருக்கு போன் போட்டிருக்கிறார் இளங்கோவன். சிதம்பரமே போனை எடுத்ததுப் பேசியிருக்கிறார். ‘சார்... சிஎம்தான் பேசச் சொன்னாரு. உங்களப் பத்தி பேசினதுக்காக ரொம்ப வருத்தப்பட்டாரு. உங்ககிட்ட சாரி கேக்கறதுக்காக சிஎம் பேசணும்னு விரும்புறாரு. நீங்க சொன்னீங்கன்னா உங்க லைன்ல வந்து பேசுறேன்னு சொன்னாரு’ என்று கூறியிருக்கிறார். அதற்கு ப. சிதம்பரம், ‘இல்லைங்க. அதை நான் எதுவும் பெரிசா எடுத்துக்கலை. அவர் என்கிட்ட பேச வேண்டிய அவசியமும் இல்ல’ என்று மென்மையாக மறுத்துவிட்டார். இந்தத் தகவலும் முதல்வருக்கு சொல்லப்பட அவர் மேலும் வருத்தப்பட்டிருக்கிறார்.

இதற்கிடையே டெல்லியில் சிதம்பரத்திடம் சில தமிழகப் பத்திரிகையாளர்கள் பேட்டி கேட்டிருக்கிறார்கள். அப்போது எடப்பாடி கூறிய விஷயம் பற்றிக் கேட்பதாக இருந்தால் பேட்டி வேண்டாம் என்று சொல்லிவிட்டார் சிதம்பரம். ஒருவேளை எடப்பாடி தன்னிடம் சாரி கேட்டுவிட்டதால் அது தொடர்பான விவாதத்தை நீட்டிக்க வேண்டாம் என்று சிதம்பரம் நினைத்திருக்கக் கூடும்.

முதல்வர் இப்படி வருத்தப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் ஓ.பன்னீர் தரப்பினர் வேறு ஒரு காரணத்தைச் சொல்கிறார்கள்.

‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதற்றத்திலோ பரபரப்பிலோ அந்த வார்த்தைகளை பேசவில்லை. ரொம்பவும் நிதானமாகத்தான் பேசியிருக்கிறார். இப்போதெல்லாம் தன்னைப் பற்றி ஊடகங்களை எப்படி பேச வைக்க வேண்டும் என்பதை ரொம்பவே சாமர்த்தியமாக செய்து வருகிறார் முதல்வர். ஆகஸ்டு 13 ஆம் தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நிலச்சரிவு, மழைவெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய நீலகிரிக்குச் சென்றார். பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு சென்று மக்களையும் அதிகாரிகளையும் சந்தித்தார் ஓ.பன்னீர்.

இந்த நிலையில் கொங்கு வட்டாரத்தைச் சேர்ந்த முதல்வர் ஏன் நீலகிரி பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்று அதிமுகவின் கொங்கு நிர்வாகிகள் மத்தியிலேயே பேச்சு எழுந்தது. துணை முதல்வர் வந்து பார்க்கும்போது முதல்வருக்கு என்ன வந்தது, கோவை வரை வந்துவிட்டு நீலகிரி பக்கம் முதல்வர் செல்லாதது ஏன் என்று அதிமுகவுக்குள் விமர்சனக் குரல்கள் கள் கேட்டன. இந்த நிலையில் துணை முதல்வரின் நீலகிரி விசிட்டுக்கு உரிய முக்கியத்துவம் ஊடகங்களில் கிடைக்கக் கூடாது என்றுதான் மேட்டூர் அணை திறப்பை திடீரென முடிவு செய்தார் முதல்வர். அதிலும் சிதம்பரம் பற்றி இப்படி ஒரு பதிலைச் சொல்லி மொத்த கவனமும் தன் பக்கம் திரும்புமாறும், பன்னீரின் நீலகிரி விசிட்டை பின்னுக்குத் தள்ளுமாறும் செய்துவிட்டார்’ என்கிறார்கள் ஓ.பன்னீரின் ஆதரவாளர்கள்.

சில சீனியர் அமைச்சர்கள் கூட, ‘நாம ஏதாவது பேசிட்டா அப்படி பேசக் கூடாது இப்படி பேசக் கூடாதுனு சொல்லுவாரு. இப்ப இவரே தாறுமாறா பேசிட்டாரே’ என்று எடப்பாடி பழனிசாமியை பற்றி கமெண்ட் அடித்திருக்கிறார்கள்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.


மேலும் படிக்க


நேர்கொண்ட பார்வை: ஒரு மறுபார்வை!


வேலூர் ரிசல்ட்: அதிமுக - பாஜக மோதல்!


எந்தச் சட்டம் அதிகாரம் வழங்கியது? தகவல் கேட்கும் இன்ஸ்பெக்டர்!


கணக்கு கேட்கும் சங்கீதா... கடுப்பில் வேலூர் திமுகவினர்!


அத்திவரதர் சர்ச்சை: கலெக்டர் பெயரைக் குறிப்பிடத் தயங்கும் ஐபிஎஸ் சங்கம்!


புதன், 14 ஆக 2019

அடுத்ததுchevronRight icon