மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 5 ஆக 2020

காட்டுவாசிகளிடம் கற்றவை - 2

காட்டுவாசிகளிடம் கற்றவை - 2

- நரேஷ்

அவர்களிடம் கற்பதற்கு முன்னால், அவர்களைப் பற்றி கற்பது அவசியமாகிறது. பழங்குடிகள் என்பவர்கள் யார்? அவர்களுக்கென்று தனி குணம், அடையாளம் என்றெல்லாம் உள்ளதா? சமூக மனிதர்களிடமிருந்து அவர்கள் எந்த வகையில் எந்த இடங்களில் வேறுபடுகிறார்கள்?

எஞ்சியிருக்கும் நேர்மையான கம்யூனிஸ்டுகளில் பழங்குடிகளின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் வி.பி.குணசேகரன். பழங்குடி மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்தவரை, ‘வி.பி.ஜி’ என்று அம்மக்கள் அன்போடு அழைக்கிறார்கள். பழங்குடி மக்களுக்கான சட்டரீதியான உதவிகளை மிகுந்த பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் செய்து வருகிறார். ‘பழங்குடிகளின்’ பூர்வீகத்தைக் குறித்தும், வாழ்க்கை முறை குறித்தும் எழுதப்பட்டுள்ள வரலாற்றைத் தாண்டி, கதை வழியாகவும் அனுபவம் வழியாகவும் அவர்களிடத்திலிருந்து அறிந்துகொண்டதை கதைபோல் நம்மிடம் கதைக்கிறார்.

பெரும்பான்மையான பழங்குடி மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. ஒலி வடிவ மொழியில் கடத்தப்பட்ட வரலாற்றை எழுத்தின் வழி காண்பதென்பது, உண்மை வரலாற்றிலிருந்து விலகி இருக்கும் செயல். தலைமுறைகள் கடந்து ஒலி வடிவில் காற்றோடும் காதுகளோடும் கடத்தப்பட்டு வரும் கதைகள் வழியாக அவர்களின் வாழ்க்கை முறையை அறிவதுதான் அறிவியல் ரீதியாகவும் சரியான அணுகுமுறை. அதை அந்த ஆச்சர்யத்துடனே அணுகுவது, கேட்டறிவதற்கறிய கதை.

“யார் பழங்குடிகள்னு எளிமையா செல்லணும்னா, சின்ன சின்ன குழுக்களாக வாழ்வார்கள். அவர்களுக்கென்று தனி மொழி உண்டு. அவர்களின் வாழ்விடங்களுக்கு எல்லை உண்டு. அந்த இனக்குழுவுக்கான தனித்த கலாச்சாரம் உண்டு. இயற்கையை சிதைக்காத, அதனுடன் இரண்டறக் கலந்த வாழ்க்கை முறையை உருவாக்கி பின்பற்றி வருபவர்கள். இன்னொரு முக்கியமான விஷயம், பழங்குடிகளிடம் சாதிகள் இல்லை, மதங்கள் இல்லை. அரசாங்கம் சென்சஸ் எடுக்கும்போதுகூட பழங்குடிகளை ‘இந்து’ன்னு குறிப்பிடுவாங்க. அதை நாங்க கடுமையா எதிர்க்குறோம்” என்று ஆரம்பித்தவர், மிக முக்கிய குற்றச்சாட்டு ஒன்றைக் குறிப்பிட்டார்.

“நாம ‘Community’ சர்டிஃபிகேட் வாங்குறோம். ‘கம்யூனிட்டி’ன்னா சாதின்னு அர்த்தமா என்ன? பெறகு எதுக்கு தமிழ்ல சாதிச் சான்றிதழ்னு குடுக்குறாங்க. கம்யூனிட்டின்னா ‘இனம்’. அதை இனச் சான்றிதழ்னுதான் சொல்லணும். இங்க இருக்குற மக்கள் வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்தவர்கள். ஊராளி, பளியர், பணியர், தொதவர், குரும்பர்னு நாம சொல்றதெல்லாம் பல்வேறு பழங்குடி இனங்களின் பெயர். அது சாதிகளின் பெயர் அல்ல. சாதி என்ற சொல்லுக்கு அர்த்தமே இவங்களுக்குத் தெரியாது. 'Caste' சர்டிஃபிகேட் ஏதும் இங்கே இருக்கா என்ன? இவர்களை ‘இந்து’ என்று அடையாளப்படுத்துவது வரலாற்று துரோகம். பழங்குடிகள் இந்த மாதிரியான குறுகிய அடையாளங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்கள்” என்றவர் பழங்குடிகளுடைய சமூகப் புரிதல்களை குறித்து தொடர்ந்தார்.

“பழங்குடிகள் கிட்ட உயர்வு-தாழ்வு, ஆண்-பெண் போன்ற எண்ணங்களே கிடையாதப்போ, நீங்க அவங்களை எப்படி சாதி ரீதியாகவும் மத ரீதியாகவும் அடையாளப்படுத்த முடியும்? அவங்க தேவைகளுக்காக மட்டுமே வாழ்பவர்கள். அதாவது, பிறந்ததுல இருந்து இறக்குற வரைக்கும் உடம்புக்கு மனசுக்கும் என்ன தேவையோ அதை மட்டும் எடுத்துப் பயன்படுத்தி வாழுறவங்க அவங்க. எந்த ஒரு பழங்குடி இனக்குழுக்கிட்டேயும், தேவைக்கு அதிகமான ஒரு தானிய மூட்டையைக் கூட பார்க்க முடியாது” என்றவரிடம் பழங்குடிகள் காடுகளுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்ற கேள்வியை முன்வைத்தோம். ஒரே வரியில் பதிலளித்தார்.

“பழங்குடிகள் இல்லாத வனம் பாலைவனம்!” என்று.

இதைவிட வலிமையாகவும் எளிமையாகவும் பழங்குடிகளுடைய முக்கியத்துவத்தை விளக்கிவிட முடியாது. இது உலகளாவிய பிரச்சினை. காடுகளைப் பாதுகாப்பது பழங்குடிகளாக இருக்கும் காரணத்தினால்தான். அவர்கள் தொடர்ந்து சுரண்டுபட்டுக்கொண்டும் விரட்டப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்கள்.

சமீபத்திய சான்று, அமேசானில் எரிந்துகொண்டிருக்கும் பழங்குடிகளுக்கு எதிரான அரசியல். எண்ணெய் வித்துகளை விதைப்பதற்கு மில்லியன் கணக்கான ஏக்கர் நிலத்தை அரசு தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கையில், அதன் பல்லுயிர்த்தன்மையை எடுத்துரைத்து சமூகப் போராட்டமும் சட்டப் போராட்டமும் நிகழ்த்தி காடுகளை காத்தவர்கள் பழங்குடி பெண்கள்!

பழங்குடிகளுக்குக் காடுகள் மீதான உரிமையை வழங்குவதென்பது, காடுகளைப் பாதுகாப்பதற்கான செயல்திட்ட வரைவு. அவை காடுகளுக்கானது மட்டுமல்ல. ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நன்மைக்குமானது.

(இன்னும் கற்போம்)


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: “என் உடலையும் தந்தேன் பணமும் தந்தேன்”- ப.சிதம்பரத்துக்கு எதிராக இந்திராணி வாக்குமூலம்


லண்டனில் திருமாவளவனுக்கு நடந்தது என்ன?


கேர்டேக்கர்: துரைமுருகன் கிண்டல்!


வெளிநாடு புறப்படுகிறார் எடப்பாடி: இரு வார அரசியலில் என்ன நடக்கும்?


எடப்பாடி பயண மர்மத்தை உடைக்கும் ஸ்டாலின்


வியாழன், 29 ஆக 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon