மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, செவ்வாய், 20 அக் 2020

சிங்கம் நடமாடிய காட்டில் நரிகள் நாட்டாமை!

சிங்கம் நடமாடிய காட்டில் நரிகள் நாட்டாமை!

தமிழ் சினிமா சங்கங்களும் அத்துமீறல்களும் - 2

இராமானுஜம்

தலைமைப் பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அல்லது நியமிக்கப்படுகிறவர்கள் ஆளுமை மிக்கவர்களாக இருக்க வேண்டும் அப்போதுதான் அந்த பொறுப்புக்கு பெருமை.

அப்படியொரு பெருமை கடந்த நான்கு வருடங்களாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கிடைக்கவில்லை. அதனால் தான் சிங்கம் நடமாடிய காட்டில் நரிகள் நாட்டாமை தனம் செய்ததை போல தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தற்போது உள்ளது என்கிறார் மூத்த தயாரிப்பாளர் ஒருவர்.

அசுர பலத்தோடு தேர்தலில் வெற்றி பெற்று தலைமைப் பொறுப்புக்கு வந்த விஷால் தலைமையிலான நிர்வாகக்குழு, பல ஆக்கபூர்வமான முடிவுகளை அமுல்படுத்த முயற்சித்த போதெல்லாம் அதற்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் இன்றைக்கு அரசாங்க உதவியுடன் ஆலோசனைக் குழு உறுப்பினர் என்கிற பெயரில் சிங்கத்தை நிர்வகிக்கும் லகானை தங்கள் வசப்படுத்தி இருக்கிறார்கள்.

அரசாங்கத்தின் உதவியுடன் பொறுப்புக்கு வருபவர்கள், தங்களை தலைமைக்குரிய தகுதியாளர்களாக வளர்த்துக் கொள்வார்கள். அப்படி ஒரு ஆச்சர்யம் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் மத்தியில் நடந்து விடுவதற்கான வாய்ப்பு தொலை தூரத்திற்கு இல்லை என்று கூறுகிறார் தயாரிப்பாளர் ஒருவர்.

ஏனென்றால் பெயரளவில் ஆலோசனைக்குழு உறுப்பினர் பட்டியல் என்ற ஒன்றை தனி அதிகாரி அறிவித்ததோடு சரி; அப்படி அறிவிக்கப்படுவதற்கு முன்பு அந்த பொறுப்புக்கு இவர்கள் தகுதியானவர்கள்தானா; சங்க உறுப்பினர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் தானா என்பதை ஆய்வுக்கு உட்படுத்தி இருந்திருக்கலாம்.

அப்போதுதான் ஒரு கூட்டு விவாதம் நடத்தப்பட்டு, ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு, தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கௌரவம் பாதுகாக்கப்பட்டிருக்கும் என்கின்றனர் சிறுபட தயாரிப்பாளர்கள்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினராக இருக்க கூடிய ஒருவர் எடுத்த படம் (தர்மபிரபு) திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுது, இந்த படத்தை அரசியல் சார்புடன் ஆலோசனை குழுவில் இருக்கும் உறுப்பினர் எஸ் வி சேகர் கடுமையாக விமர்சனம் செய்து தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் இருந்திருந்தால் உடனடியாக இதற்கு எதிர்வினையாற்றி இருக்க முடியும். ஆனால் எஸ்.வி.சேகர் அவ்வாறு பதிவிட்டது தவறு என்பதை ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் சுட்டிக்காட்டவில்லை.

ஆலோசனைக்குழு அமைக்கப்பட்ட பின்னர், தேர்தல் நடைபெறும் வரை என்னவெல்லாம் செய்யலாம் என்பதற்கான எந்த ஒரு திட்டமிடலும்; வழிகாட்டுதலும்; ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஒன்றுபட்டு உருவாக்கவில்லை.

குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டும் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக வரம்பு மீறி செயல்படுவதாக ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இருக்கும் ராதாகிருஷ்ணன் குற்றம் சுமத்தி ஆடியோ பதிவொன்றை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

நலிந்த தயாரிப்பாளர்களுக்கு அன்புத்தொகை என்கிற பெயரில் நிதி உதவி வழங்கும் திட்டம் மறைந்த இராமநாராயணன் தலைவராக இருந்த போது தொடங்கப்பட்டது.

நடிகர் விஷால் தலைவராக இருந்தவரை இந்தத் திட்டத்தின் மூலம் தயாரிப்பாளர்கள் பயனடைந்து வந்தனர். சங்கத்திற்கு தனி அதிகாரி நியமிக்கப்பட்ட பின்னர் இந்தத் திட்டத்தை தொடர இயலவில்லை.

இந்தத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றால், தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு பொறுப்பில் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருக்கும் JSK சதீஷ் அன்பு தொகை வேண்டுபவர்கள் தங்களது விவரங்களை சங்க அலுவலகத்திற்கு தெரியப்படுத்தினால், தனிப்பட்ட முறையில் தயாரிப்பாளர்களிடம் வசூல் செய்து, மாதந்தோறும் அன்புத்தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்கிறார்.

தனிப்பட்ட முறையில் உதவி செய்வது தவறில்லை என்று கூறும் ராதாகிருஷ்ணன், அந்த தொகையை வசூல் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் பெயரை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம். நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள உறுதிமொழிக்கு எதிரான செயல் இது.

எதிர்வரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில், தாங்கள் வெற்றி பெறுவதற்கு வாக்குகளை பெறுவதற்காக தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்கு ஆலோசனைக் குழு உறுப்பினர் என்கிற பொறுப்பை பயன்படுத்திக்கொள்ளும் அத்து மீறிய செயலாகவே இதை நான் பார்க்கிறேன் என்கிறார் ராதாகிருஷ்ணன்.

தயாரிப்பாளர் சங்கத்தில் 450க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் போலி ஆவணங்கள் மூலம் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார் சதீஷ். அவர் இப்பொழுது தயாரிப்பாளர்கள் வறுமையில் வாடுவதாகவும் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் நீலிக்கண்ணீர் விடுவதன் மர்மமென்ன?

“நலிந்த தயாரிப்பாளர்களுக்கு நிதி உதவி செய்வதை நான் தடுக்கவில்லை. ஆனால் அதே நேரம் அனைத்துஆலோசனைக் குழு உறுப்பினர்களும் பங்கேற்கும் ஒரு கூட்டத்தை நடத்தி, அதில் முடிவெடுத்து, இந்த திட்டத்தை அமல்படுத்தினால் அதில் நியாயம் இருக்கும் நேர்மை இருக்கும். அதை விட்டுவிட்டு தனிநபராக இதை செய்ய முயற்சிப்பது அத்துமீறிய செயல் அல்லவா” என்கிறார் ராதாகிருஷ்ணன்.

சினிமாத்துறை சார்ந்த சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் திரைப்படங்களை திரையிடுவதில் கட்டுப்பாடு கொண்டு வருகிறோம் என்று சேலம் ஏரியா திரையரங்கு உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது ஆலோசனை குழு.

அந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திரையரங்கு உரிமையாளர்கள், தற்காலிகமாக ஒப்புக்கொண்டு பட வெளியீட்டின்போது கூட்டத்தில் எடுத்த முடிவை அவர்கள் அமல்படுத்தவில்லை. ஏனென்றால் சட்டரீதியாகவும் சங்க நடைமுறைகள் அடிப்படையில் இந்த முடிவு தங்களை கட்டுப்படுத்தாது என்பதால்தான்.

“இது ஆலோசனை குழுவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே நான் கருதுகிறேன்” என்கிறார் ஆலோசனைக்குழு உறுப்பினரான ராதாகிருஷ்ணன்.

பத்திரிகையாளர்களுடன் ஏற்பட்ட மோதலும் அத்துமீறலும் நாளை..

தமிழ் சினிமா சங்கங்களும் அத்துமீறல்களும் - 1


மேலும் படிக்க


டிஜிட்டல் திண்ணை: திமுக புள்ளிகளுக்கு பாஜக வலை!


தம்பியை திமுகவில் சேர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ!


அதிகாரம் - அறநெறி: சமகாலத்தின் இரு சாட்சிகள்!


பிக் பாஸ் 3: கவின் காலி செய்த பிக் பாஸ் ஸ்கிரிப்ட்!


ரஜினிக்கு அதிகரிக்கும் அழுத்தம்!


செவ்வாய், 3 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon