மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 30 அக் 2020

புகழேந்தி விலகுகிறாரா? அமமுக கேள்வி!

புகழேந்தி விலகுகிறாரா?  அமமுக கேள்வி!

புகழேந்தி பேசுவது அவர் கட்சியிலிருந்து வெளியேறுவது போல உள்ளதாக அமமுக பொருளாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி விமர்சிக்கும் வீடியோ நேற்று முன்தினம் வெளியானது. அதில் தினகரனை மீண்டும் தான் தான் அரசியலுக்கு அழைத்துவந்து ஊருக்கு அறிமுகப்படுத்தியதாக பேசியிருந்தார். தான் அப்படி பேசியது உண்மைதான் என்று தெரிவித்த புகழேந்தி, அமமுக ஐடி விங் மீது சரமாரியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த நிலையில் இதற்கு அமமுக தரப்பிலிருந்து ரியாக்‌ஷன் செய்யப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக நேற்று (செப்டம்பர் 9) செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொருளாளர் வெற்றிவேல், “தினகரனை அரசியலுக்கு அழைத்துவந்தேன் என புகழேந்தி கூறுவது தவறான கருத்து. அந்த வீடியோவை வெளியிட்டது அமமுக ஐடி விங் என்பதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு. எல்லாக் கட்சிகளிலும் நிர்வாகிகள் மத்தியில் யாருக்கு இடம் என்பதில் சில பிரச்சினைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். அப்படி இருக்கும்போது பிரச்சினையை பொதுச் செயலாளர் தினகரனிடம் எடுத்துச் செல்லாமல் இவரே பேசியது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “ஜெயலலிதாவால் இரண்டு முறை எம்.பியாக்கப்பட்டு, அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்த டிடிவி தினகரனை கர்நாடகாவில் இருந்துவந்த தான் அறிமுகப்படுத்தினேன் என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம். தினகரன் நான்கு முறை அப்போலோ மருத்துவமனை சென்று ஜெயலலிதாவைப் பார்த்தார். அவரின் மனைவி மருத்துவமனையிலேயேதான் இருந்தார்” என்று சுட்டிக்காட்டிய வெற்றிவேல்,

அமமுக, தினகரன் குறித்தெல்லாம் பேசியதால்தான் புகழேந்திக்கே முகம் கிடைத்தது. அமமுகவிற்கு வந்தபிறகுதான் அவருக்கு மரியாதை கிடைத்தது. அதனை அவர் மறந்துவிடக் கூடாது. கோவையில் நிர்வாகிகளிடம் சரியாகப் பேசியிருந்தால் பிரச்சினையே இருந்திருக்காது. புகழேந்தி பேசுவதைப் பார்த்தால் வேறு கட்சிக்குச் செல்வது போலதான் உள்ளது. இதை அவர்தான் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

திங்கள், 9 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon