மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 10 செப் 2019

காஷ்மீர், அசாம் விவகாரங்கள்: இந்தியாவுக்கு ஐ.நா கோரிக்கை!

காஷ்மீர், அசாம் விவகாரங்கள்: இந்தியாவுக்கு ஐ.நா கோரிக்கை!

ஜம்மு காஷ்மீர், அசாம் உள்ளிட்ட விவகாரங்களில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் தலைவர் மிஷேல் பேச்சிலெட் கவலை தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர்

கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு சட்ட அந்தஸ்தை (ஆர்டிகள் 370, ஆர்டிகள் 35ஏ) மத்திய அரசு ரத்து செய்தது. இந்த அறிவிப்பை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவிப்பதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 4ஆம் தேதி முதல் ஜம்மு காஷ்மீரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்தன. அதன் ஒருகட்ட நடவடிக்கையாக தொலைபேசி, லேண்ட்லைன், இணைய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இணைய சேவைகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டன. அறிவிப்பு வெளியானதும் அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலின் 42ஆவது அமர்வு ஜெனிவா நாட்டில் நேற்று (செப்டம்பர் 9) தொடங்கியது. மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிஷேல் பேச்சிலெட், காஷ்மீர் விவகாரம் பற்றிக் குறிப்பிடும்போது, “காஷ்மீர் விவகாரம் மிகவும் கவலையளிக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும் அவரது உரையில் கூறியதாவது:

இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகள் காஷ்மீரிகளின் உரிமைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து நான் ஆழமாகக் கவலையடைகிறேன். தகவல் தொடர்பு முடக்கம், அமைதியாக மக்கள் ஒன்று கூடுதல், உள்ளூர் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் கைது செய்தல் ஆகியவை குறித்து வரும் தகவல்களால் கவலை அடைந்துள்ளோம்.

இந்தியாவும் பாகிஸ்தானும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதையும் காக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தும் அதே வேளையில், தற்போதைய ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் குறித்து இந்தியாவிடம் குறிப்பாக முறையிட்டுள்ளேன். அதாவது அடிப்படை சேவைகள் மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்தல், கைது செய்யப்பட்டவர்களுக்கான அனைத்து உரிமைகளும் மதிக்கப்பட வேண்டும் போன்றவற்றை இந்தியாவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

காஷ்மீரிகளின் எதிர்காலத்தில் தாக்கம் ஏற்படுத்தப்போகும் எந்தவித நடவடிக்கையிலும் அவர்களும் பங்கெடுக்க வேண்டும்.

அசாம்: தேசிய குடிமக்கள் பதிவேடு

இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காணும் வகையில் அசாமில் (தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சியின் இறுதிப் பட்டியல் சென்ற ஆகஸ்ட் 31ஆம் தேதி வெளியிடப்பட்டது. மொத்தம் 3,30,27,661 பேர் குடியுரிமைக்கு விண்ணப்பித்தனர். ஆனால் குடிமக்களின் தேசிய பதிவேட்டில் வெறும் 3,11,21,004 நபர்களின் பெயர்கள்தாம் இடம்பெற்று இருந்தது. குடியுரிமை நிரூபிக்காத அல்லது நிரூபிக்க முயன்று நிராகரிக்கப்பட்ட 19,06,657 பேரின் பெயர்கள் இந்த இறுதிப் பட்டியலில் இணைக்கப்படவில்லை. இதனால் குடியுரிமை நிரூபிக்க முடியாதவர்களின் எதிர்காலம் என்னவாகும் எனக் கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், காஷ்மீரைத் தொடர்ந்து மனித உரிமைகள் ஆணையத் தலைவர் மிஷேல் பேச்சிலெட் அசாம் மாநிலத்தில் நடத்தப்பட்ட என்.ஆர்.சி (தேசிய குடிமக்கள் பதிவேடு) விவகாரம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். அப்போது பேசிய அவர்:

19 லட்சம் மக்கள் இறுதிப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது அசாமில் பெரிய நிச்சயமின்மையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. முறையீட்டு நடைமுறைகள் சரியாக நடைபெற இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அசாம் மக்களை நாடு கடத்துவதையும், முகாம்களுக்குக் கொண்டு செல்லப்படுவதையும் தடுப்பதோடு நாடற்றவர்களாக அவர்கள் ஆவதிலிருந்து தடுக்கப்படுவதையும் இந்தியா உறுதி செய்ய வேண்டும்.

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

3 நிமிட வாசிப்பு

சிமென்ட் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

3 நிமிட வாசிப்பு

திருப்பதியில் குவியும் பக்தர்கள்!

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

2 நிமிட வாசிப்பு

இ-பதிவில் முறைகேடு: எச்சரித்த தமிழ்நாடு அரசு!

செவ்வாய் 10 செப் 2019