ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் கோயமுத்தூரைச் சேர்ந்த மாடலான திவ்ய பாரதி நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.
இசையமைப்பாளராக இருந்து கதாநாயகனாக மாறிய ஜி.வி. பிரகாஷ், தமிழ் திரையுலகில் மினிமம் கியாரண்டி ஹீரோவாக தனக்கென ஒரு இடத்தை அடைந்துள்ளார். இவ்வருடத்தின் தொடக்கத்திலிருந்து சர்வம் தாள மயம், குப்பத்து ராஜா, வாட்ச்மேன் என ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்த மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. இவற்றில் வசூல் ரீதியாக முதலில் வெளியான சர்வம் தாள மயம் நல்ல வரவேற்பையும், குப்பத்து ராஜா தோல்வியையும், வாட்ச்மேன் ஆகிய படங்கள் ஆவரேஜ் ஓபனிங்கையும் பெற்றது.
சித்தார்த்துடன் இணைந்து ஜி.வி. பிரகாஷ் நடித்த சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் சென்ற வாரம் வெளியானது. சசி இயக்கியுள்ள இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காஷ்மீரா பர்தேசி, லில்லிமோல் ஜோஷ் இப்படத்தில் நாயகிகளாக நடித்துள்ளனர். ‘ஸ்ட்ரீட் ரேசராக’ இப்படத்தில் நடித்துள்ளார் ஜி.வி. பிரகாஷ் குமார். நீண்ட இடைவெளிக்குப் பின், ஜி.வி. பிரகாஷுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளது இப்படம்.
இந்நிலையில், ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் உருவாகவுள்ள புதிய படம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கிறது. ஆக்சஸ் பிலில் பேக்டரி இப்படத்தை தயாரிக்கவுள்ளது. அறிமுக இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தின் மூலம், கோயமுத்தூரைச் சேர்ந்த மாடலான திவ்ய பாரதி வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகிறார்.
இப்பட்டத்தின் போஸ்டர் மற்றும் தலைப்பு நாளை வெளியாகவிருக்கிறது என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.