மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 25 செப் 2020

சிறையில் நடந்ததை என்னிடம் மறைப்பதா? தினகரனுக்கு வந்த கோபம்!

சிறையில் நடந்ததை என்னிடம் மறைப்பதா?  தினகரனுக்கு வந்த கோபம்!

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவை, கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி சந்திக்க சென்ற தினகரன், சிறைக்குச் சென்றும் அவரை சந்திக்காமலேயே சென்னை திரும்பினார். தினகரன் மீது சசிகலா கோபத்தில் இருப்பதால்தான் சந்திப்பு நிகழவில்லை என முதலில் சொல்லப்பட்டது. ஆனால், தினகரனுக்கு முன்னதாகவே சந்திரலேகா ஐஏஎஸ் சசிகலாவை சந்தித்துவிட்டுச் சென்றதால் சிறை விதிகள்படி தினகரனால் சந்திக்க முடியவில்லை.

சிறையில் சசிகலாவும் சந்திரலேகாவும் அதிமுக-அமமுக இணைப்பு தொடர்பாகத்தான் நிறைய பேசியிருக்கிறார்கள். அப்போது, சிறையில் நடந்த சந்திப்பு பற்றி தினகரனுக்கு எதுவும் சொல்ல வேண்டாம் என சந்திரலேகா கேட்டுக் கொண்டிருக்கிறார். சசிகலாவும் அதற்கு சரியெனக் கூறியிருக்கிறார்.

இதனால் தனக்கு தெரியாமல் சசிகலாவை சந்தித்தது யார் என்ற குழப்பத்தில் தினகரன் இருந்திருக்கிறார். யார் அந்த முக்கிய நபர் என்று பெங்களூருவில் இருக்கும் தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் எல்லாம் தினகரன் விசாரித்தபோதும், டெல்லியிலிருந்து யாரோ வந்ததாக மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து, சிறைக்கு வந்து சசிகலாவை சந்தித்தது யார் என புகழேந்தியிடம் கேட்டிருக்கிறார் தினகரன். எவ்வளவோ கேட்டும் அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்று சாதித்து வந்திருக்கிறார். ஆனால், புகழேந்திக்கு அனைத்தும் தெரியும். அவர்தான் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் என்று அவர் மீது தினகரன் சந்தேகப்பட்டிருக்கிறார்.

இந்தக் கோபம்தான் புகழேந்தி மீது தினகரனுக்கு தொடர்கிறது. தனக்கு தெரியாமல் புகழேந்தி தனி ரூட் எதுவும் எடுத்து கட்சியை கைப்பற்ற நினைக்கிறாரோ என்ற பயத்தில்தான் இருக்கிறாராம் தினகரன். அதன் வெளிப்பாடுதான் தற்போது புகழேந்தி தினகரனை விமர்சிக்கும் வீடியோ வெளிவந்தது என்கிறார்கள் அமமுக வட்டாரங்களில்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon