மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 1 அக் 2020

சென்னையில் தீவிரவாதி கைது!

சென்னையில் தீவிரவாதி கைது!

தென்னிந்தியாவில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதாக தெற்கு பிராந்திய ராணுவ கமாண்டர் எஸ்.கே.சைனி எச்சரித்திருந்த நிலையில் இன்று சென்னையில் ஜமாத் உல் முஹாஜிதீன் என்ற தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி நீலாங்கரையில் கைது செய்யப்பட்டார்.

பங்களாதேசை சேர்ந்த ஜமாத் உல் முஹாஜிதீன் என்ற அமைப்பை மத்திய அரசு கடந்த மே மாதம் தடை செய்தது. இந்த நிலையில் இந்த அமைப்பைச் சேர்ந்த ஷேக் அசதுல்லா என்ற ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க மாவட்டம் பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷேக் அசதுல்லா என்ற நபரை, அம்மாநில போலீசார் வழக்கு ஒன்றில் தேடி வந்துள்ளனர். அந்த நபர் சென்னை வந்து, நீலாங்கரையில் வாடகைக்கு வீடு எடுத்து கட்டிட தொழிலாளி போல் தங்கியிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து மேற்கு வங்க காவல் துறையினர், சென்னை காவல் துறை உதவியுடன் அவரை தேடி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, பிகாரில் 2013ல் புத்தகயாவில் வெடிகுண்டு தாக்குதல் வழக்கிலும் ஷேக் அசதுல்லா தொடர்பிலிருந்ததாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில் ஷேக் அசதுல்லா நீலாங்கரையில் பதுங்கியிருப்பதை அறிந்து மேற்கு வங்க காவல் துறையினருடன் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரை கிண்டியில் உள்ள என்ஐஏ அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியிருக்கின்றனர். அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கொல்கத்தா அழைத்துச் சென்று விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். மேலும் ஷேக் அசதுல்லாவுக்கு தொடர்புடையவர்கள் யாரேனும் சென்னையில் இருக்கிறார்களா என்றும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon