மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 15 ஆக 2020

எடப்பாடியின் செயல்பாடுகளில் திடீர் வித்தியாசம்!

எடப்பாடியின் செயல்பாடுகளில் திடீர் வித்தியாசம்!

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு முறை பயணமாக கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி லண்டன் சென்றார். அங்கிருந்து அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்தார். வெளிநாட்டுப் பயணம் முழுவதும் கோட்-சூட்டுடன் காட்சியளித்த முதல்வர், துபாய் விமான நிலையத்திலிருந்து நேற்று சென்னை புறப்படுவதற்கு முன்பாக வேட்டி-சட்டை என இயல்பான உடைக்கு மாறினார்.

முதல்வர் பயணித்த இ.கே-542 விமானம் இன்று (செப்டம்பர் 10) அதிகாலை 2.33 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது. முதல்வருடன் அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயகுமார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் சண்முகம், முதல்வரின் செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன், செயலாளர்-2 விஜயக்குமார், செயலாளர்-3 செந்தில்குமார், பாதுகாப்பு அதிகாரி எஸ்.பி.ராஜா, முதல்வரின் உதவியாளர்கள் கார்த்திகேயன், எழிலழகன், அரசு போட்டோ கிராபர் பாபு உட்பட 12 பேர் உடன் வந்தனர்.

விமானம் தரையிறங்கிய அடுத்த ஐந்து நிமிடத்தில் விவிஐபி செல்லும் (5வது கேட்) வழியாக முதல்வர் வெளியே வந்துவிட்டார். அமைச்சர்களும், அதிகாரிகளும் பொதுவழியாக 3.40 மணிக்கு வெளியே வந்தனர். முதல்வரை வரவேற்க முதலில் வந்து காத்திருந்தவர் மக்களவை முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை. அடுத்தடுத்து செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிமுகவினரும் வருகை தந்தனர். முதல்வரை வரவேற்க கடைசியாக வந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதல் ஆளாக கிளம்பிச் சென்றுவிட்டார். அவர் ஏதோ அதிருப்தியில் இருப்பதாக அங்கிருந்தவர்கள் பேசிக்கொண்டனர்.

வழக்கமான வரவேற்புகள் முடிந்து பேட்டியளித்த பின்னர் விமான நிலையத்திலிருந்து முதல்வர் வெளியே வந்தார். அங்கு கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து புன்னகைத்து விட்டு கார் அருகில் சென்றவர், தனது காரில் ஏறாமல் பின்னால் நின்றிருந்த கான்வாய் பாதுகாப்பு இன்னோவா வாகனத்திற்கு பின்புறம் சென்றார்.

கான்வாய் கார் பின் புறத்தில் உள்ள ஃபுட் ரெஸ்ட்டில் (படிகள்) விருட்டென ஏறி நின்ற முதல்வர், மேலே உள்ள கம்பியைப் பிடித்துக்கொண்டு தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தபடி சுமார் 500 அடி தூரம் சென்றார். (தலைவர்கள் காரில் செல்லும்போது பாதுகாப்பு அறனாக தொண்டர்கள் சுற்றிலும் கம்பியைப் பிடித்துக்கொண்டு தொங்கியபடி செல்வது வழக்கம். அதுபோலவே முதல்வரும் நின்றுகொண்டே சென்றார்). முதல்வரை வரவேற்பதற்காக விமான நிலையத்திலிருந்து 3 கி.மீ தூரம் வரை பொதுமக்களை நள்ளிரவு முதலே காத்திருந்தனர்.

அனைத்து அமைச்சர்களும் வந்துவிட்ட நிலையில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் விமான நிலையத்திற்கு முதல்வரை வரவேற்க வரவில்லை. மேலும் அவரது ஆதரவாளர்களில் செம்மலையைத் தவிர வேறு யாரும் வரவில்லை. அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளராக இருக்கும் கே.பி.முனுசாமி முழுமையாக ஒதுங்கிவிட்டதாகவே சொல்கிறார்கள் அதிமுகவினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே பிரச்சினை இருந்துவருவதாக தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் நிலையில், வரவேற்பு நிகழ்ச்சிக்கு பன்னீர்செல்வம் செல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. இருவருக்கும் இடையே பிரச்சினை இருப்பது உண்மைதான் என்கிற ரீதியில் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட ஆரம்பித்துவிட்டனர்.

இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இன்று மதியம் அவரை நேரில் சந்தித்த பன்னீர்செல்வம், பூங்கொத்து கொடுத்து பொன்னாடை அணிவித்து வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து வந்ததற்காக வாழ்த்து தெரிவித்தார். இதன்மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon