வீட்டில் சமைத்தாலும் விதவிதமான உணவுகளை அன்றாடம் வீட்டுக்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு உணவுப் பிரியர்கள் அதிகரித்து வருகிறார்கள். உணவகங்களில் சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோக்கில் பல்வேறு ரசாயனங்களைச் சேர்ப்பார்கள். அவை மிக எளிதாகக் கொழுப்பை அதிகரிக்கச் செய்துவிடும். எனவே, வெளியிடங்களில், சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். துரித உணவுக்காக முண்டியடிப்பவர்களுக்கான மாற்று உணவு, இந்த காலிஃப்ளவர் சில்லி ஃப்ரை. இதை வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.
என்ன தேவை?
காலிஃப்ளவர் - 300 கிராம்
மைதா – 2 டீஸ்பூன்
கார்ன்ஃப்ளார் (சோள மாவு) - 2 டீஸ்பூன்
தேன் - ஒரு டீஸ்பூன்
தண்ணீர் - கால் கப் + ஒரு டேபிள்ஸ்பூன்
வெண்ணெய் - 10 கிராம்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு டீஸ்பூன்
சோயா சாஸ் - 2 டேபிள்ஸ்பூன்
வினிகர் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்குத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, கால் கப் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவுப் பதத்தில் கரைக்கவும். பின்பு சுத்தம் செய்த காலிஃப்ளவர் துண்டுகளை அதில் தோய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். பானில் (pan) வெண்ணெயைச் சூடாக்கி, அதில் இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி சாஸ், சில்லி ஃப்ளேக்ஸ், தேன், வினிகர், சோயா சாஸ், ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்துக் கிளறி அடுப்பை அணைக்கவும். பின்பு பொரித்த காலிஃப்ளவரை இந்த சாஸ் கலவையில் சேர்த்து டாஸ் செய்து பரிமாறவும்.