மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஒகேனக்கல் பரிசல் விபத்து: அடித்து செல்லப்பட்ட பெண்!

ஒகேனக்கல் பரிசல் விபத்து: அடித்து செல்லப்பட்ட பெண்!

மின்னம்பலம்

ஒகேனக்கல்லில் தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்ததில் பிரான்ஸ் நாட்டில் வாழும் புதுச்சேரி பெண் அடித்துச் செல்லப்பட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளத்தால் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணை நேற்று முன்தினம் 43ஆவது முறையாக நிரம்பியது. இதனால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

இந்நிலையில், காவிரி ஆற்றில் குளிக்கவும், பரிசல்களை இயக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தடையை மீறி இயக்கப்பட்ட பரிசல் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் வசித்து வரும் புதுச்சேரியைச் சேர்ந்த மனோ என்பவர் தனது மனைவி அஞ்சலாட்சி, மகள் மோசிகா ஆகியோருடன் நேற்று இரவு ஒகேனக்கலுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார். பரிசலில் செல்ல விரும்பிய அவர்கள், இன்று ஓகேனக்கல்லைச் சேர்ந்தபரிசல் ஓட்டியான மனோகரன்(37) என்பவரது பரிசலில் பயணித்துள்ளனர். முசல்மருவு என்ற பகுதியிலிருந்து ஒகேனக்கல்லை நோக்கிப் பயணித்த போது வெள்ளப்பெருக்கினால் பரிசல் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் அஞ்சலாட்சி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். மனோகரனும், மற்ற இருவரும் மரக்கிளைகளைப் பிடித்துக் கரையேறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் தடையை மீறி பரிசல் இயக்கியதற்காக மனோகரனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள பரிசல் ஓட்டுபவர்கள் உதவியுடன் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon