மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 19 அக் 2020

ரஜினியை எதிர்ப்பேன், விஜய்யை ஆதரிப்பேன்: சீமான்

ரஜினியை எதிர்ப்பேன், விஜய்யை ஆதரிப்பேன்: சீமான்

ரஜினி, விஜய் அரசியல் வருகை தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். அவர் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தையும் அவர் முன்வைக்கிறார். அதே சமயம் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக இதுவரை அறிவிக்காத நிலையில், அவரின் அரசியல் வருகையை வரவேற்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 11) செய்தியாளர்களை சந்தித்த சீமான், இதுதொடர்பாக விளக்கம் அளித்தார்.

அவர் கூறுகையில், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை நாங்கள் எதிர்க்கிறோம். ஆனால், விஜய் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறோம். ஏனெனில் ரஜினிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. விஜய்க்கும் எங்களுக்கும் ரத்த உறவு இருக்கிறது. அவன் என் இனம் சார்ந்தவன். அதனால், அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன். தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்ய அவர் அரசியலுக்கு வரலாம். அப்படி வந்து மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்காமல் விஜய்க்கு வாக்களித்தால் வாழ்த்துவேன். எங்களுக்கு வாக்களித்தால் நன்றி சொல்வேன். இதுதான் எங்களுடைய நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

பொருளாதார வீழ்ச்சி குறித்த கேள்விக்கு, “முதலாளிகளின் கடன்களை தள்ளுபடி செய்ததுதான் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம். விவசாயிகளைப் பற்றி கவலைப்படாத நாடு முன்னேறாது. விவசாயத்தை கைவிட்டு தொழில் வளர்ச்சி பற்றி பேசுவது ஆபத்தில்தான் முடிவடையும்” என்று எச்சரித்தவர், பொருளாதார வீழ்ச்சி தான் மத்திய அரசின் நூறுநாள் சாதனையாக உள்ளது எனவும் விமர்சித்தார்.

மேலும், முதல்வரின் வெளிநாட்டுப் பயணம் குறித்து வெள்ளை அறிக்கை கேட்கும் திமுக, தங்களது ஆட்சிகாலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை கொடுத்தது என தெரிவிக்க வேண்டுமென்றும் சீமான் குறிப்பிட்டார்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon