மின்னம்பலம்
போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும் கடுமையான அபராதத்தை, விரும்பினால் மாநில அரசு குறைத்து திருத்தம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்ததிலிருந்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அதிகபட்சமாக ரூ.1,41,000 அபராதம் கட்டியுள்ளார். கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தனது மாநிலத்தில், மத்திய அரசு விதித்த அபராதத் தொகையைக் குறைத்து உத்தரவிட்டார். அதன்படி, ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு 1000 ரூபாய் மத்திய அரசு அபராதம் விதித்திருந்த நிலையில், அதனை 500 ரூபாயாக குறைத்துள்ளது குஜராத் அரசு. ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கு 5000 ரூபாயிலிருந்து 2000 முதல் 3000 ரூபாயாகவும், இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பதற்காக விதிக்கப்படும் அபராதம் 1000 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், காற்று மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் 10 ஆயிரம் ரூபாயிலிருந்து 1000 முதல் 3000 ஆயிரம் ரூபாயாகவும் குறைத்துள்ளது. குறைக்கப்பட்ட அபராதம் செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ். 4 ஸ்கூட்டர் அறிமுக விழாவில் கலந்து கொண்டு பேசிய மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, “மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகையைக் குறைத்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார், ”அபராத தொகையை அதிகரிப்பதன் மூலம் வருவாயை அதிகளவு ஈட்டுவதாக கூறப்படுகிறது. வருவாயை ஈட்டுவது நோக்கம் அல்ல. விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் குறைப்பது தான் நோக்கம். ஒருவரது உயிரை விட அபராதம் முக்கியமானதா? சாலை விதிகளை மீறாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டியதில்லை” என்று தெரிவித்துள்ளார். இந்தநிலையில் தமிழகத்தில் அபராதத் தொகை குறைக்கப்படுமா என்று வாகன ஓட்டிகளிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.