மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 1 ஜுன் 2020

தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் நெருக்கடி!

தலைமை நீதிபதிக்கு பார் கவுன்சில் நெருக்கடி!

உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் முடிவுக்குச் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமணி மதிப்பு கொடுக்க வேண்டும் என்று அனைத்து இந்திய பார் கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

75 நீதிபதிகளைக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து 3 நீதிபதிகளை கொண்ட மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டதற்கு எதிராகத் தனது பதவியை மூத்த பெண் நீதிபதியான தஹில் ரமணி ராஜினாமா செய்தார். அவருக்கு ஆதரவாகத் தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 11) தஹில் ரமணி விவகாரம் தொடர்பாக அனைத்து இந்திய பார் கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது, அதில், ”உச்ச நீதிமன்ற கொலீஜியத்தின் முடிவைத் தலைமை நீதிபதி மதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது. ”தலைமை நீதிபதி வி.கே. தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுவதற்கு வேறு எதாவது காரணங்கள் இருக்கலாம் என்று கற்பனை செய்வது நியாயமற்றது. அவர் மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை அப்படி இருந்திருந்தால் முன்னதாக மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மூன்று முறையும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் கொலீஜியத்தால் நியமிக்கப்பட்டிருக்கமாட்டார். மும்பை, சென்னை உயர் நீதிமன்றங்களுக்கு மாற்றிய போது ஏற்றது போல் மேகாலயாவுக்கு மாற்றியதையும் ஏற்க வேண்டும். தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது கொலீஜியத்தின் மதிப்பை குறைக்கும் செயலாகும். மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கும் அதன் அதிகார வரம்புக்குள் வரும் மக்களுக்கும் பாகுபாடு காட்டாமல் இந்த வாய்ப்பை ஸ்போர்டிவாக எடுத்துக் கொண்டு பதவி ஏற்க வேண்டும். இந்தியாவில் அனைத்து உயர் நீதிமன்றங்களும் சமமானவை. நீதிபதிகள் சிறிய நீதிமன்றத்துக்குச் செல்வதைத் தவிர்ப்பது தவறான அணுகுமுறை. தஹில் ரமணி இடமாற்றத்திற்கும் குஜராத் பில்கிஸ் வழக்கிற்கும் தொடர்புப்படுத்தி பரப்பப்படும் தகவல் தவறு. நீதிபதிகள் தஹில் ரமணி மற்றும் அஜய்குமார் இடமாறுதல் குறித்த முடிவுக்கு விரைந்து ஒப்புதல் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon