மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 7 ஆக 2020

தர்பார்: ரஜினி காப்பு சொல்லும் ரகசியம்!

தர்பார்: ரஜினி காப்பு சொல்லும் ரகசியம்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் உருவாகும் தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

இந்த வருடம் பொங்கலுக்கு வெளியான பேட்ட திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் முதன் முறையாக இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இணைந்துள்ள படம் தர்பார். இது ரஜினிகாந்த் நடிக்கும் 167வது படமாகும்.

2.0க்கு பிறகு ரஜினியுடன் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் இணையும் இரண்டாவது படமிது. மூன்று முகம், பாண்டியன், கொடி பறக்குது திரைப்படங்களை தொடர்ந்து தர்பார் படத்தில் போலீஸாக ரஜினிகாந்த் வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், 4 மாத இடைவெளிக்குப் பின் இன்று(செப்டம்பர் 11) தர்பார் படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை வெளியிடவுள்ளதாக லைக்கா நிறுவனம் காலையில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து காலை முதலே ரஜினி ரசிகர்கள் #DarbarSecondlook என ஹேஷ் டேக்கிட்டு இந்திய அளவில் டிரெண்டிங்காக்கி வருகின்றனர். அறிவித்தபடியே மாலை 6 மணிக்கு வெளியான போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகியுள்ளது.

போஸ்டர் சீக்ரெட்ஸ்

ஜிம்மில் இருந்தபடி வியர்வையில் உடற் பயிற்சியில் ஈடுபட்டு வரும் ரஜினிகாந்தின் படம் இந்த போஸ்டரில் வந்திருக்கிறது. முதல் போஸ்டரில் மும்பை பின்னணியில் ஜீப்பில் அமர்ந்திருக்கும் காவல்துறை அதிகாரி ரஜினிகாந்த், இரண்டாவது போஸ்டரில் லண்டனில் உள்ள பிரபல BXR பாக்ஸிங் ஜிம்மில் பயிற்சி எடுத்துக் கொண்டிருப்பதாக வெளியாகியிருக்கிறது.

அதன் பின்னர், படையப்பா படத்தில் ரஜினிகாந்த் கையில் அணிந்திருக்கும் தோள் வளையை, நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது தர்பார் படத்தில் ஸ்டைலாக அணிந்திருப்பது ரஜினிகாந்தின் பழைய ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.

தர்பாரில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் எனப் பலர் இப்படத்தில் நடித்துவருகின்றனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். அனிருத் இசையமைக்கிறார். பொங்கல் வெளியீடாக வரவிருக்கிறது தர்பார்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon