மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வியாழன், 6 ஆக 2020

சிதம்பரம் கைது கண்டனக் கூட்டம்: ஒதுங்கிய தலைவர்கள்!

சிதம்பரம் கைது கண்டனக் கூட்டம்: ஒதுங்கிய தலைவர்கள்!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதுபோலவே கர்நாடகத்தைச் சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவக்குமார், அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். சிவக்குமார் கைதை எதிர்த்து கர்நாடகமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

அதே வேளையில் தமிழகத்தில் சிதம்பரம் கைதை கண்டித்து பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படவில்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு கட்சி ரீதியாக 70 மாவட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 50, 100 என்ற அளவில் தமிழகம் முழுவதுமே சுமார் 15,000 பேர் வரைதான் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் டெல்லி செல்வதற்கு முன்பு நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம், “கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி அடிக்கடி ஆட்சிக்கு வருகிறது. தமிழகத்தில் ஆட்சிக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டன. கர்நாடகத்தில் காங்கிரஸுக்கு இருக்கும் பலம் தமிழகத்தில் இல்லை. மறியல் செய்யும் அளவுக்கு கர்நாடகத்தில் இருக்கும் பலம் தமிழகத்தில் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.

இதனையடுத்து காங்கிரஸ் சமூக வலைதள அணியினர் கார்த்தி சிதம்பரத்தை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டனர். தமிழகத்திலிருந்து ஏதோ ஒரு ரீதியில் நிதித் துறை,உள் துறை போன்ற பதவிகளை வகித்த சிதம்பரம், கட்சி தொண்டன் மனதில் இடம் பிடித்திருந்தால் தமிழகமும் கர்நாடகாவை மிஞ்சும் என்றும், உங்கள் அப்பா எம்.பியாக இருந்த, நீங்கள் தற்போது எம்.பியாக இருக்கும் உங்களது சொந்த ஊர் உள்ள சிவகங்கை தொகுதியிலேயே போராட்டத்திற்காக உங்களால் 1,000 பேருக்கு மேல் கூட்ட முடியவில்லையே என்றும் அவர்கள் பொங்க ஆரம்பித்துவிட்டனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் சென்னை வந்திருந்த கார்த்தி சிதம்பரம், சிதம்பரம் கைதைக் கண்டித்து கூட்டம் நடத்துவது தொடர்பாக தனது தாயார் நளினி சிதம்பரத்துடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். பாஜக, அதிமுக தவிர்த்து அனைத்து எதிர்க்கட்சிகளையும் அழைத்து மாபெரும் கூட்டமாக நடத்தலாம் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். திமுக கூட்டத்தில் கலந்துகொள்வதாக அறிவித்தாலும், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டாலும் அது இந்திய அளவில் கவனிக்கப்படும் என்றும் கூட்டமும் அதிகளவில் கூடும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருக்கிறார்கள்.

ஏற்கனவே சிதம்பரம் கைதுக்கு திமுக தரப்பிலிருந்து பெரிய அளவில் ரியாக்‌ஷன் ஏதும் வரவில்லை. திமுக தலைவர் ஸ்டாலின், கண்டனம் தெரிவித்ததோடு நிறுத்திக்கொண்டார். திமுக பொருளாளர் துரைமுருகனோ, “சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது சட்டத்திற்கும் நீதிக்கும் உட்பட்டது” என்று தெரிவித்துவிட்டார். மேலும், இதுதொடர்பாக பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் தொண்டர் போல திமுக தலைமை செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது எனக் கூறினார். இந்த நிலையில் கைதைக் கண்டிக்கும் கூட்டத்தில் கலந்துகொள்வதிலும் திமுக ஏனோ பெரிய ஆர்வம் காட்டவில்லை.

இதனால் கண்டனக் கூட்டமாக நடத்தாமல், சிதம்பரத்தின் 75 ஆவது பிறந்தநாள் வரும் 16ஆம் தேதி வரவுள்ளதால், பிறந்தநாள் கூட்டமாக நடத்தலாம் என்று கார்த்தி சிதம்பரமும், நளினியும் முடிவெடுத்திருக்கிறார்கள். இதில் கலந்துகொள்வோருக்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களுக்கு அழைப்பு சென்றிருக்கிறது.

சிறப்பு அழைப்பாளராக நளினி சிதம்பரத்தின் கல்லூரி தோழரும், இந்து குழுமத் தலைவருமான என்.ராமை அழைக்கலாம் என்று முடிவு செய்து அவரை நளினி சிதம்பரம் தொடர்பு கொண்டிருக்கிறார். ஆனால், ‘பிறந்தநாள் கூட்டத்திற்கு என்னால் வர முடியாது. அன்றைய தினம் நான் இலங்கை செல்கிறேன். வேண்டுமென்றால் சிதம்பரம் கைதைக் கண்டித்து கூட்டம் நடத்துங்கள். கட்டாயம் வருகிறேன். அதுவும் 15ஆம் தேதி வைத்தால் மட்டும்’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் என்.ராம். இதனையடுத்து பிறந்தநாள் கூட்டம் மறுபடியும் சிதம்பரம் கைதைக் கண்டிக்கும் கண்டனக் கூட்டமாக மாறியது. இதனையடுத்து திமுக தோழமை இயக்கமான திராவிடர் இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியனுக்கு அழைப்பு சென்றிருக்கிறது. அவர் கண்டிப்பாக வருகிறேன் என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் மூத்த தலைவர்கள் யாராவது இருந்தால் நன்றாக இருக்குமே என்று கூறி பீட்டர் அல்போன்ஸை அழைத்திருக்கிறார்கள். ஆனால் அவரோ, ‘எனக்கு கட்சியில் முக்கியத்துவம் ஏதுவுமில்லை. சிதம்பரமும் எனக்கு பெரிய ஆதரவு தந்ததில்லை’ என்று கூறி ரொம்பவும் வருத்தப்பட்டிருக்கிறார். மேலும், அன்றைய தினம் விசிக தலைவர் திருமாவளவன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளேன் என்று கண்டனக் கூட்டத்தை தவிர்க்க முயற்சி செய்திருக்கிறார். இந்தத் தகவல் நளினிக்கு சொல்லப்பட, அவர் உடனே பீட்டர் அல்போன்ஸுக்கு போன் செய்து பேசினார். இதனையடுத்து, பீட்டர் அல்போன்ஸ் வருவதாக உறுதியளித்திருக்கிறார்.

கூட்டத்திற்கு தலைமை தாங்க தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் என்பதன் அடிப்படையில் கே.எஸ்.அழகிரியை அழைத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக அழகிரியிடம் கார்த்தி சிதம்பரம் போனில் பேச, ‘அன்றைய தினத்தில் நான் சென்னையில் இல்லை, வெளியூருக்கு செல்கிறேன். வேறு கூட்டம் கலந்துகொள்ள வேண்டியிருக்கிறது’ என அவரும் நழுவியிருக்கிறார். ஆகவே, சிதம்பரத்திற்கு நெருக்கமானவர்கள் தலைமை தாங்கினால் நன்றாக இருக்கும் என எண்ணி அட்வகேட் ஜெனரலாக இருந்த மாசிலாமணியை நளினி அழைத்துள்ளார். அவரும் வருவதாக உறுதியளித்திருக்கிறார். இதனையடுத்து, ஒரு வழியாக கூட்டம் நடைபெறுவது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

காங்கிரஸின் மனித உரிமை காக்கும் அமைப்பின் சார்பாக சிதம்பரத்தின் பிறந்தநாளுக்கு முந்தைய நாளான வரும் 15ஆம் தேதி சிதம்பரத்தின் கைதைக் கண்டிக்கும் கூட்டம் சத்தியமூர்த்தி பவனில் அரங்கக் கூட்டமாக நடைபெறுகிறது.

புதன், 11 செப் 2019

அடுத்ததுchevronRight icon