மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 2 ஜுன் 2020

சென்னை: ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை: ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தென்னிந்தியப் பகுதிகளுக்குத் தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை பிரபல ஐடி நிறுவனத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

கடந்த மாதம் இலங்கை மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதைத் தொடர்ந்து என்ஐஏ அதிகாரிகள் கோவையில் சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சூழலில் தென்னிந்தியப் பகுதிகளில் தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என ராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது. நேற்று மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஷேக் அசதுல்லா சென்னையில் கைது செய்யப்பட்டார். இவ்வாறு தீவிரவாதத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கும் நிலையில், நேற்று இரவு 10.15 மணிக்கு சென்னையில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்துக்குத் தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்திருக்கிறது.

சென்னை கந்தன்சாவடியில் 13 அடுக்கு மாடிகளைக்கொண்ட ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றி வரும் காவலர்கள் அறைக்குத் தொலைபேசி மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இந்தக் கட்டடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறி விடும் என்றும் மிரட்டல் விடுத்திருக்கிறார். இதுகுறித்து நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி உடனடியாகப் பணியில் இருந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தரமணி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் வந்து 13 மாடி கட்டடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. இதற்கிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon