மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, சனி, 30 மே 2020

எடப்பாடியின் நீர் சிக்கனம்: ஸ்டாலின் கிண்டல்!

எடப்பாடியின் நீர் சிக்கனம்: ஸ்டாலின் கிண்டல்!

முதல்வர் இஸ்ரேல் பயணம் செல்வதாக அறிவித்துள்ளது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகப் போராடிய தியாகி இம்மானுவேல் சேகரனின் 62ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் இன்று (செப்டம்பர் 11) அரசியல் கட்சிகளின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பரமக்குடி சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, மக்களவை உறுப்பினர் கனிமொழி, முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், சுப.தங்கவேலன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின், “நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவு சீர்குலைந்துள்ளது. பொருளாதாரம் 5 சதவிகிதமாக சரிவை சந்தித்ததுதான் மோடி தலைமையிலான மத்திய அரசின் 100 நாள் சாதனை” என்று விமர்சனம் செய்தார்.

இதற்கிடையே முதல்வரின் இஸ்ரேல் பயணம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஸ்டாலின், “நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்வதாக முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். ஆனால், கொள்ளிடம் ஆற்றில் இருந்து 20 ஆயிரம் கன அடி நீர் வீணாக கடலில் கலப்பது பற்றி முதலமைச்சர் கவலைப்படாதது வேதனை அளிக்கிறது.உள்ளூர் நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு இஸ்ரேல் செல்வதா?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், “நீரை சேமிக்காமல் வீணாக்கும் பொதுப்பணித்துறை இப்போது புதுப்பணித் துறையாக மாறியுள்ளது. உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல், கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக 'இஸ்ரேல் போகிறேன்' என்பது வேடிக்கை மிகுந்த விநோதமாக இருக்கிறது.எனவே ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது எடப்பாடி பழனிசாமி அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon