மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 21 ஜன 2021

வருண் அறக்கட்டளை: சர்வதேசப் போட்டிக்கு தயாராகும் பல்லக்கு மாநகர்!

 வருண் அறக்கட்டளை: சர்வதேசப் போட்டிக்கு தயாராகும் பல்லக்கு மாநகர்!வெற்றிநடை போடும் தமிழகம்

விளம்பரம்

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் சாதனை புரிந்த வீரர்களின் பட்டியலைப் பார்க்கும் போது இந்திய வீரர்களின் பெயர்கள் வந்துவிடாதா என்று ஏக்கத்துடன் பார்க்கிறோம். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் தப்பிதவறி ஒன்றிரண்டு பெயர்கள் வரும் போது கொண்டாடி மகிழ்கிறோம்.

இங்கு திறமையானவர்கள் இல்லையா, அல்லது அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லையா என்பது தான் நம் முன்னிருக்கும் கேள்வி. சந்தேகமில்லாமல் சொல்லலாம் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன என்று.

அன்றாட வாழ்வுக்கே வழியற்ற நிலையில் கோடிக்கணக்கானோர் உள்ள போது இப்போதுதான் கல்வியின் வாசம் அவர்களை நோக்கி அடிக்கத் தொடங்குகிறது. இந்நிலையில் விளையாட்டு துறை எல்லாம் வசதி படைத்தவர்களுக்கு என்ற எண்ணம் எளிதாக உருவாகிவிடுகிறது. சூழல் அப்படியிருக்க இயல்பாகவே போராட்ட குணம் மிக்க, மன உறுதியுடன் மோதிப் பார்க்கும் நெஞ்சுறுதி வாய்க்கப் பெற்ற அந்த இளைஞர்களை சர்வதேச அரங்கில் வலம் வரச் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார் வருண் அறக்கட்டளை நிறுவனர் வருண்.

மயிலாப்பூரில் அமைந்துள்ள பல்லக்கு மாநகர், 1500 குடும்பங்களுக்கும் மேலாக வசிக்கும் பழமையான குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் நிறைந்த பகுதி. சிறிய நிலப்பரப்பில் பத்தாயிரத்துக்கும் அதிகமான மக்கள் உள்ள அந்தப் பகுதி அடிப்படை வசதிகள் பூர்த்தியாகாத நிலையிலேயே உள்ளது.

பல்லக்கு மாநகரிலேயே அமைந்துள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில்தான் அப்பகுதி இளைஞர்கள் கால்பந்து, கைப்பந்து, கபடி போன்ற விளையாட்டுக்களை விளையாடிவருகின்றனர்.

ஆட்டத்தின் நுணுக்கங்கள் எல்லாம் கைவரப்பெற்ற இளைஞர்கள் கரடுமுரடான மைதானத்தில் வெறும் காலில் கால்பந்து விளையாடும் கொடுமையைப் பார்த்த வருண் அறக்கட்டளை அவர்களுக்கு தேவையான ஷூ, ஜெர்ஸி, உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை வழங்கி ஊக்குவித்தது. மாணவர்கள், இளைஞர்கள் விளையாடும்போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் மைதானத்தைச் சுற்றி இரும்பு வலை அமைத்துக்கொடுத்துள்ளனர்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த திலீப் குமாரிடம் பேசினோம். “எங்கள் பகுதியில் கால்பந்து விளையாட்டு ரொம்பவே பிரபலம். சிறுவர்களிலிருந்து வேலைக்குப் போகும் இளைஞர்கள் வரை கொண்டாட்டமாய் விளையாடுவோம். இருப்பினும் எங்களுக்கு எந்த வசதியும் இதுவரை யாரும் செய்துகொடுத்தது கிடையாது. பந்துகளைவிட மைதானத்தின் கற்கள்தான் எங்கள் காலில் அதிகம் பட்டுள்ளன. இரத்தக்கறையுடன் தான் பந்து கோல் கம்பிக்குள் போகும்.

எங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் இதுகுறித்து பலமுறை மனுக்கள் அளித்தோம். எந்த பதிலும் இல்லை. வருண் அறக்கட்டளை நிறுவனர் வருண் எங்கள் ஆர்வத்தையும் திறமையையும் அங்கீகரித்து, எங்களுக்கு தேவையான உதவிகளை ஒரு மூத்த சகோதரன் போல் செய்து கொடுத்தார். முதன்முறையாக எங்கள் பகுதி இளைஞர்கள் ஷூ அணிந்து கால்பந்து விளையாடிய அந்த தருணத்தை எப்போதும் மறக்கமுடியாது. டிவியில் பார்த்து ரசித்த ரொனாால்டோ, ரொனால்டினோ, மெஸி, போல நாங்களும் ஜெர்ஸி அணிந்து ஆடியது பெரும் நம்பிக்கையை ஊட்டியது.

அதுமட்டுமல்லாமல் எங்கள் மைதானத்தை சீரமைத்துக் கொடுத்தார். எங்கள் ஏரியாவின் மையத்தில் மைதானம் இருப்பதால் விளையாடும் போது எதிர்பாராதவிதமாக பந்து பட்டு விபத்துக்களும் நடந்துள்ளன. இதனால் மக்களுக்கும் இடையூறு ஏற்பட்டது. இந்தப் பிரச்சினையை வருண் அண்ணனிடம் உரிமையுடன் கொண்டு சென்றோம். உடனே அவர் தரமான இரும்புக் கம்பிகள் உள்ள வலை அமைத்துக்கொடுத்தார். இதனால் மற்ற பகுதி இளைஞர்கள்கூட எங்கள் மைதானத்தில் ஆட விருப்பம் தெரிவித்தனர்.

அதன்பின்னர் வருண் அண்ணன் மயிலாப்பூரைச் சுற்றியுள்ள 32 அணிகளை ஒருங்கிணைத்து ஒரு விளையாட்டுப் போட்டி நடத்தினார். ஜூலை 26ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் எங்கள் பிஎம்ஃப்சி அணி முதல் பரிசான 15,000 ரூபாயை வென்றது. இரண்டாம் இடத்தை ஜீவா அகாடமி பெற்றது. 10,000 ரூபாய் அவர்களுக்கு வழங்கப்பட்டது. கலந்துகொண்ட அத்தனை அணிகளுக்கும் வீரர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்பின் மயிலாப்பூர் சுற்றுவட்டாரத்திலேயே எங்கள் அணியைப் பற்றித் தான் பேச்சு” என்று கூறினார்.

மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டோம். “பசங்க சும்மா விளையாடி நேரத்தை போக்குகிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருந்த எங்கள் பெற்றோர்களே, ஜெர்ஸி, ஷூ, சாக்ஸ் உடன் நாங்கள் விளையாடியதையும், சுற்றி நின்று கூட்டத்தினர் கைதட்டியதையும் பார்த்தபோது அவர்களுக்கு மிகவும் பெருமையாக இருந்தது” என்றார்.

திலீப் குமாரிடம் உங்கள் அடுத்த கட்ட இலக்கு என்ன என்று கேட்ட போது, “இந்த விளையாட்டுப் போட்டியோடு நிறைவு கண்டுவிடக்கூடாது என்பதுதான் வருண் அண்ணன் எங்களுக்குச் சொன்னது. மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொள்ள ஊக்கப்படுத்தினார். அன்றிலிருந்து எங்களுக்கு விளையாட்டுப் போட்டியின் மூலம் சாதிக்க முடியும் என்ற பெரும் நம்பிக்கை வந்துள்ளது. நம்மை கைதூக்கிவிட ஒரு அண்ணன் இருக்கிறார் என்ற நினைப்பு மட்டுமே போதும், ஒருநாள் சர்வதேச போட்டியில் எங்கள் பல்லக்கு மாநகர் வீரரும் கலந்துகொள்வார். அதை டிவியில் இந்த உலகமே பார்க்கும்” என்று சொல்லிமுடித்தார். அப்போது அவரது முகத்தில் பெரும் நம்பிக்கை சுடர்விட்டது.

விளம்பர பகுதி

செவ்வாய், 10 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon