மின்னம்பலம் மின்னம்பலம்
திங்கள், 14 அக் 2019

சிதம்பரத்தை விசாரிக்க விரும்பவில்லை: அமலாக்கத் துறை

சிதம்பரத்தை விசாரிக்க விரும்பவில்லை: அமலாக்கத் துறை

சிதம்பரத்தை தற்போது காவலில் எடுத்து விசாரிக்க விரும்பவில்லை என சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 5ஆம் தேதி சிபிஐ காவல் முடிந்த நிலையில் தான் அமலாக்கத் துறை காவலுக்குச் செல்லத் தயாராக இருப்பதாக சிதம்பரம் தரப்பில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால், அதனை நிராகரித்த நீதிபதி, வரும் செப்டம்பர் 19ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் திகார் சிறைக்கு அனுப்ப உத்தரவிட்டார்.

இந்த நிலையில் தான் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையிடம் சரணடைய விரும்புவதாக சிதம்பரம் தரப்பிலிருந்து சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கு நீதிபதி அஜய் குமார் குஹார் முன்பு இன்று (செப்டம்பர் 12) விசாரணைக்கு வந்தது.

வழக்கின் தொடக்கத்திலேயே அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “தற்போது சிதம்பரத்தை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க விரும்பவில்லை. தேவைப்படும்போது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோருவோம்” என்று தெரிவித்தார்.

சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “சிதம்பரத்தை கைது செய்ய கடந்த 20ஆம் தேதி அவரது இல்லத்திற்கு அமலாக்கத் துறை வந்தது தெளிவாகத் தெரிந்தது. குறிப்பிட்ட காலத்தில் சிதம்பரத்தை கைது செய்யவும் முயற்சிகள் மேற்கொண்டது. ஆனால், தற்போது சிதம்பரத்தின் சிறைவாசத்தை நீட்டிக்கவே விரும்புகிறது. அமலாக்கத் துறை வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதி அஜய் குமார் குஹார், இந்த மனுவின் மீதான உத்தரவை நாளை பிற்பகல் 2 மணிக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon