மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 25 மே 2020

‘காப்பானைக்’ காப்பாத்திட்டோம்!

‘காப்பானைக்’ காப்பாத்திட்டோம்!

காப்பான் கதை திருட்டு தொடர்பான முக்கியமான தீர்ப்பை இன்று உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள நிலையில், அப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

சூர்யா, மோகன் லால், சாயிஷா, ஆர்யா உள்ளிட்ட பெரும் நட்சத்திரக் கூட்டணி இணைந்து உருவாக்கியுள்ள படம் காப்பான். அயன், மாற்றான் படங்களுக்குப் பின் மூன்றாவது முறையாக கே.வி. ஆனந்த் இப்படத்தின் மூலம் சூர்யாவுடன் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. லைக்கா நிறுவனம் இப்படத்தை அதிக பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறது. இந்தப் படத்தின் திரைக்கதையை கே.வி.ஆனந்த், பட்டுக்கோட்டை பிரபாகர், கபிலன் வைரமுத்து ஆகிய மூவரும் இணைந்து எழுதியுள்ளனர்.

ஆகஸ்ட் 15ஆம் தேதி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரபாஸின் சாஹோ ரிலீஸ்(முதலில் ஆகஸ்ட் 15 என அறிவிக்கப்பட்டு பின்னர் ஆகஸ்ட் 30 என மாற்றப்பட்டது), லைக்கா நிறுவனத்துக்கும், விநியோகஸ்தர்களுக்குமான சிக்கல் என ரிலீஸ் தேதியை செப்டம்பர் 20ஆம் தேதி மாற்றியது.

இதற்கிடையில், சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த ஜான் சார்லஸ் என்பவர் காப்பான் படத்தின் கதை தன்னுடையது என்றும் அதைத் திருடி கே.வி.ஆனந்த் படம் இயக்கியுள்ளதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் கட்ட விசாரணையாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜான் சார்லஸ் தரப்பில், “ கடந்த 2014-2016ம் ஆண்டுகளில் ‘சரவெடி’ என்ற தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தேன். பத்திரிகை நிருபரான கதாநாயகன், இந்திய பிரதமரிடம் பேட்டி காணும்போது, விவசாயம், நதி நீர் இணைப்பு, நதி நீர் பங்கீடு ஆகியவற்றின் நன்மை குறித்து எடுத்துரைப்பார். இந்த கதையை இயக்குநர் கே.வி.ஆனந்திடம் விரிவாகக் கூறினேன். வாய்ப்பளிப்பதாக உறுதியளித்த கே.வி.ஆனந்த், என்னுடைய சரவெடி கதையை காப்பான் என்ற பெயரில் படமாக்கியுள்ளார். எனவே, காப்பான் படத்தை வெளியிட தடை விதிக்கவேண்டும்” என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் மீதான தீர்ப்பு இன்று(செப்டம்பர் 12) வெளியாகியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம் காப்பான் கதை திருட்டு வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லாததால் ஜான் சார்லஸ் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, காப்பான் படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த் காப்பான் கதை திருட்டு விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பதற்காக செய்தியாளர்களைச் சந்தித்தார். அவருடன் பட்டுக்கோட்டை பிரபாகர், வழக்கறிஞர் சங்கர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் இருந்தனர்.

கே.வி. ஆனந்த் கூறும் போது “2012ஆம் ஆண்டே இந்தப் படத்தின் கதையைப் பதிவு செய்துள்ளார் பட்டுக்கோட்டை பிரபாகர். கதைத் திருட்டு வழக்கு தொடர்ந்த ஜான் சார்லஸ் என்னைச் சந்தித்ததாகச் சொன்னதில் எந்த உண்மையும் இல்லை. இந்தப் படம் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரி பற்றியதே தவிர, நதிநீர் பங்கீட்டுக்கும், இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்றார்.

காப்பான் படத்தின் கதாசிரியரும், திரைக்கதையில் பங்காற்றியவருமான பட்டுக்கோட்டை பிரபாகரன் கூறும் போது,“கதைத் திருட்டு தொடர்பான புகார்கள், எப்போதுமே பெரிய படங்களுக்கு மட்டுமே வருகின்றன. இதிலிருந்தே அந்தப் புகார்கள் உள்நோக்கம் கொண்டது எனத் தெரிகிறது. எங்கள் மீது கதைத் திருட்டு குற்றம் சாட்டிய ஜான் சார்லஸ் மீது அவதூறு வழக்கு தொடரப்படும்” என்றார் பட்டுக்கோட்டை பிரபாகர்.

காப்பான் வழக்கு தள்ளுபடி ஆனததைத் தொடர்ந்து, அறிவித்தபடி செப்டம்பர் 20 ஆம் தேதி லைக்கா நிறுவனம் படத்தை வெளியிடுகிறது.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon