மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

மூன்றாவது திருமணம்: வெளுத்து வாங்கிய மனைவிகள்!

மூன்றாவது திருமணம்: வெளுத்து வாங்கிய மனைவிகள்!

கோவை மாவட்டம் சூலூரில் மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபரை முதல் மனைவியும், இரண்டாவது மனைவியும் சேர்ந்து அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கோவை மாவட்டம், சூலூர் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரங்க அரவிந்த் தினேஷ். 26 வயதாகும் இவர் ராசிபாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பேட்டன் மேக்கராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருப்பூர் கணபதிபாளையத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவரின் மகள் பிரியதர்ஷினிக்கும் 2016ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஆனால், திருமணமான சில நாட்களிலேயே அரவிந்த் தனது மனைவியை அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் மனைவியின் உடலில் கைகளால் கீறியும், வயிற்றில் உதைத்தும் சித்ரவதை செய்துள்ளார்.

இதுகுறித்து பிரியதர்சினி தனது மாமனார், மாமியாரிடம் சொன்னபோது, அப்படித்தான் அடிப்பான் என்று அவர்கள் அலட்சியமாகப் பதிலளித்துள்ளனர். இதைத்தொடர்ந்து, பிரியதர்ஷினி சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சூலூர் போலீசார் பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கும் புகார் அளித்த பிரியதர்ஷினி திருப்பூரில் உள்ள தனது அப்பா வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், அரவிந்த் திருமண வலைதளத்தில் மீண்டும் மணமகள் தேடி கரூர் மாவட்டம் பசுபதி பாளையத்தைச் சேர்ந்த ஐயப்பன் என்பவரின் மகள் அனுப்பிரியா என்பவரை இந்த வருடம் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி இரண்டாவதாகத் திருமணம் செய்துள்ளார். அனுப்பிரியாவுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

அதைத் தெரிந்தே அவர் திருமணம் செய்து கொண்டுள்ளார். முதல் மனைவியுடன் விவாகரத்தானதாகக்கூறி இரண்டாவது திருமணம் செய்துகொண்ட அரங்க அரவிந்த், இரண்டாவது மனைவி அனுப்பிரியாவையும், முதல் மனைவியைக் கொடுமைப்படுத்தியது போன்றே கொடுமைப்படுத்தியதாகவும் அனுப்பிரியாவின் குழந்தைக்கும் சூடுவைத்து சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இரண்டாவது மனைவி அனுப்பிரியாவும் இவரது தொல்லை தாங்க முடியாமல் தனது தாயார் வீட்டுக்குச் சென்று இருந்துள்ளார்.

இந்த நிலையில், அரங்க அரவிந்த் மீண்டும் திருமண வலைதளத்தில் மூன்றாவதாக மணமகள் தேடி விண்ணப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை அறிந்த முதல் மனைவி பிரியதர்ஷினி குடும்பத்தினரும், இரண்டாவது மனைவி அனுப்பிரியா குடும்பத்தினரும் விசாரிக்கையில் அரவிந்தன், அப்படித்தான் செய்வேன் உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, முதல் மனைவி பிரியதர்ஷினி மற்றும் இரண்டாவது மனைவி அனுப்பிரியாவும் சூலூர் வந்து அரங்க அரவிந்தனின் தந்தை சௌந்தர்ராஜை அழைத்துக் கொண்டு அரவிந்தன் பணியாற்றி வரும் தொழிற்சாலைக்குச் சென்று அவரை வெளியே அனுப்பும்படி கேட்டுள்ளனர்.

அதற்கு அவர் வேலை செய்யும் கம்பெனி நிர்வாகம் அவரை வெளியே அனுப்ப மறுத்ததால் அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து சூலூர் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் அரங்க அரவிந்தனையும், அவரது இரண்டு மனைவிகளையும் சூலூர் காவல் நிலையத்துக்கு வரச் சொல்லிவிட்டு மீண்டும் காவல் நிலையம் சென்றுள்ளனர். அப்போது கம்பெனியில் இருந்து வெளியே வந்த அரவிந்தனை அவரது முதல் மனைவி மற்றும் இரண்டாவது மனைவி சேர்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று அவர்கள் மூவரையும் சூலூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அதைத்தொடர்ந்து பிரியதர்ஷினி மற்றும் அனுப்பிரியா ஆகியோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவலர்கள் இது குறித்து முறையாக விசாரிக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மனைவிகளை மறைத்து மூன்றாவதாகத் திருமணம் செய்ய முயன்ற கல்யாண மன்னனை அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon