மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 13 ஜூலை 2020

சொல்லாமல் செய்த கலைஞர் - ஜெ.ஜெயரஞ்சன் உரை!

சொல்லாமல் செய்த கலைஞர் - ஜெ.ஜெயரஞ்சன் உரை!

ஆரணி, ழ புத்தகக்கூடு சார்பில் ‘மாபெரும் ஒரு தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ போன்ற நூல்களின் அறிமுகக் கூட்டம், கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பொருளாதார ஆராய்ச்சியாளரும் சென்னை மாற்று வளர்ச்சி மையத்தின் இயக்குநருமான திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் உரையாற்றினார்.

அவர் உரையாற்றும்போது, பொதுவாக இந்துக்கள் பெரியாரைக்கூட ஒரு கட்டத்தில் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், பேரறிஞர் அண்ணா அவர்களை ஒரு தீவிர எதிர்ப்பாளராகவும் வெறுப்பாளராகவும் நினைத்து அவரை ஏற்றுக்கொள்வது இல்லை. அந்தச் சூழலில் மவுன்ட் ரோடு மகாவிஷ்ணு என்று அண்ணாவால் அழைக்கப்பட்ட தி இந்து குடும்பம் இன்று அவரது புத்தகங்களை வெளியிடுகிறது என்பது காலத்தின் வினோதங்களில் ஒன்று.

இங்கு வெளியிடப்படும் புத்தகங்களின் தலைப்புகளைக் கவனிக்கும்போது அவற்றுள் ஒரு தொடர்பு இருப்பது நமக்குப் புரியவரும். ‘மாபெரும் ஒரு தமிழ் கனவு’, ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, ‘ஒரு மனிதன் ஒரு இயக்கம்’ இவை மூன்றையும் பொருத்திப் பார்க்கும்போது ஒரு தொடர்பு இருப்பது நமக்குப் புரியவருவதோடு, இந்த இயக்கம் அது செய்திருக்கக் கூடிய விஷயங்கள் அனைத்தையும் சுருக்கமாக ஒரு முகவரி போன்று புரிந்துகொள்ள இயலும் என்றார்.

மேலும், ‘கடந்த ஐம்பது அறுபது ஆண்டுகளில் தமிழகத்தில் மிகவும் போற்றப்பட்ட ஓர் அரசியல் தலைவர் என்றால் அவர் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் மட்டுமே. அதே நேரத்தில் மிகவும் தூற்றப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட தலைவரும் அவர்தான். தமிழக அரசியலில் மையப்புள்ளி என்றுமே கலைஞர்தான். பல வருடங்களாக அதிமுக கட்சியின் கொள்கையே கலைஞரை எதிர்ப்பது மட்டும்தான். ஒரு தனிமனிதனை எதிர்ப்பதற்காக ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டு செயலாற்றியது என்றால், அவரைப் பற்றி பேசுவதற்கு எனக்கு அச்சமாக இருக்கிறது’ என்று பொருளாதார ஆராய்ச்சியாளர் ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஜெயரஞ்சன் அவர்கள், தனது ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த மூன்று புத்தகங்களிலும் தனது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நூல் அறிமுக விழாவில் பேசிய அவர், “கலைஞர் கட்சியில் பொறுப்பேற்ற பிறகு அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கவில்லை. அதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர்தான்.

மாபெரும் தலைவர்களான பெரியாருக்கும் அம்பேத்கருக்கும் ஒரு விஷயத்தில் ஒரே நிலைப்பாடு இருந்தது. காந்தியடிகள் ராமராஜ்யம் என்னும் பெயரில் கிராமங்களைக் கட்டியெழுப்ப நினைத்தபோது அம்பேத்கர், இந்தியக் கிராமங்கள் ஊராகவும் சேரியாகவும் பிளவுபட்டு இருக்கும் வரையில் அது ஒரு கிராமமாக இருக்க முடியாது என்று கூறினார். பெரியாரும் அதுபோன்று, இந்தியக் கிராமங்கள் என்று பிரிகிறதோ அன்று தான் சாதியை ஒழிக்க முடியும் என்று கூறியிருந்தார்” எனக் குறிப்பிட்டார்.

இதுபோன்ற பல சுவாரஸ்யமான தகவல்களைத் தனது உரையில் அவர் குறிப்பிட்டிருந்தார். மேலும், இந்த பாமர மக்களுக்கு நிலம் வழங்குவதற்காகவும் அவர்களது வாழ்வாதாரம் உயர்வதற்காகவும் கலைஞர் ஆற்றிய பணிகள், பாரம்பரியமாக, பரம்பரையாக வந்து கொண்டிருந்த முறைகளை ஒழித்து, கிராம நிர்வாக அலுவலர் முறையைக் கொண்டுவர எவ்வாறு முயற்சிகள் எடுக்கப்பட்டது, அது எவ்வாறு சாத்தியமானது என்பது குறித்தும் அவர் உரையாற்றினார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களைத் தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கி ஜெயரஞ்சன் அவர்கள் உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையின் முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon