மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 8 ஜூலை 2020

சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூக நலனுக்கானவை: உச்ச நீதிமன்றம்!

சாதி மத மறுப்பு திருமணங்கள் சமூக நலனுக்கானவை: உச்ச நீதிமன்றம்!

சாதி மத மறுப்பு திருமணங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்லர் என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், சாதி மத மறுப்புத் திருமணங்கள் சமூக நலனை ஊக்குவிக்கும் என்று கூறியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த இந்து மதப் பெண் ஒருவர் முஸ்லீம் மத இளைஞரைத் திருமணம் செய்துகொண்டுள்ளார். திருமணத்திற்காக அந்த நபர் இந்துவாக மத மாற்றம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தை எதிர்த்து பெண்ணின் பெற்றோர் சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில் இருவரும் சேர்ந்து வாழலாம் என்று சத்தீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து பெண்ணின் பெற்றோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நேற்று (செப்டம்பர் 11) நீதிபதிகள் அருண் மிஷ்ரா, எம்.ஆர்.ஷா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நாங்கள் சாதி மறுப்புத் திருமணத்துக்கு எதிரானவர்கள் அல்லர். இந்து - முஸ்லிம் திருமணம் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். இருவரும் சட்டத்துக்குட்பட்டுத் திருமணம் செய்து கொண்டால் அதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சாதி மத மறுப்புத் திருமணங்கள் மூலம் சாதிய பாகுபாடுகள் நீக்கப்பட்டால் நல்லதுதான் என்று தெரிவித்துள்ளனர்.

உயர் சாதியைச் சேர்ந்தவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது சிறப்பானது, சமூகத்துக்கு நல்லது. ஆனால் திருமணம் செய்து கொள்பவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இருவரின் நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டும். குறிப்பாகப் பெண்களின் எதிர்காலம் குறித்து கவலையுள்ளது. அதனால்தான் அவர்களது எதிர்கால பாதுகாப்பை உறுதிப்படுத்தப்பட வேண்டிய தேவையுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய இருவரது திருமணம் குறித்து நாங்கள் விசாரணை நடத்தப் போவதில்லை. பெண்ணின் விருப்பத்தை மட்டுமே உறுதிப்படுத்த வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக சத்தீஸ்கர் மாநில அதிகாரிகள் பதில் அளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை செப்டம்பர் 24ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளனர்.

புதன், 11 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon