மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

போக்குவரத்து அபராதங்களை குறைக்கும் மாநிலங்கள்!

போக்குவரத்து அபராதங்களை குறைக்கும் மாநிலங்கள்!

புதிய மோட்டார் வாகனச் சட்டத்தில் அபராதத் தொகை அதிகமாக உள்ளதால் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மே.வங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் அபராதத்தை குறைத்துள்ளன.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகன சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தது. அதிலிருந்து, சாலை விதிகளை மீறுபவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ராஜஸ்தானைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அதிகபட்சமாக ரூ.1,41,000 அபராதம் கட்டியுள்ளார்.

இதனால் காரில் சென்றாலும் ஹெல்மெட் அணிவது, ஹெல்மெட்டை சுற்றி தேவையான ஆவணங்களை ஒட்டி கொள்வது போன்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன. கடந்த வாரம் ஒடிஷாவைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ரூ.70,000 அபராதம் செலுத்தியிருந்தார். விதி மீறலுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இதுபற்றி மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில் ‘‘விபத்துகளில் இருந்து மக்களைக் காப்பதற்காகத்தான் அபராதம் வசூலிக்கப்படுகிறதே தவிர, அரசின் வருமானத்தைப் பெருக்க அல்ல. வேண்டுமென்றால் அபராதத் தொகையை மாநில அரசுகள் குறைத்துக் கொள்ளலாம். அந்தத் தொகை மாநில அரசுகளின் கருவூலத்துக்குத் தான் செல்கிறது’’ எனக் கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து பாஜக ஆளும் குஜராத் மாநிலம் முதல் மாநிலமாக அபராதத்தைக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானும் அபராதத்தைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது. நேற்று(செப்டம்பர் 11) கொல்கத்தாவில் செய்தியாளர்களைச் சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்போது மனிதாபிமான அடிப்படையில் காண வேண்டும். இது மக்கள் மீது அதிக சுமையைச் செலுத்துவதாகும்” எனக் கூறி இச்சட்டதை எதிர்த்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பிஹார், ஒடிஷா, மகாராஷ்டிரா, கேரளா, உத்தராகாண்ட் உள்ளிட்ட மாநிலங்கள் அபராதத் தொகையை குறைத்துள்ளன.

தற்போது கர்நாடக மாநிலமும் அபராதத் தொகையை குறைக்க முன்வந்திருக்கிறது. இது குறித்து, கர்நாடக முதல்வர் எடியூரப்பா இன்று(செப்டம்பர் 12) கூறுகையில், ‘‘குஜராத் மாநிலத்தைப் போலவே கர்நாடகாவிலும் புதிய வாகனச் சட்டத்தில் விதிக்கப்பட்ட அபராதத் தொகையைக் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதிகாரிகள் ஆலோசனை செய்து அதற்கேற்ப அபராதத் தொகையை கணிசமாக குறைப்பார்கள். எனினும் போக்குவரத்து குற்றங்கள் குறைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது’’ எனக் கூறினார்.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon