மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

பரூக் அப்துல்லா வழக்கு: வைகோ கோரிக்கை நிராகரிப்பு!

பரூக் அப்துல்லா வழக்கு: வைகோ கோரிக்கை நிராகரிப்பு!

பரூக் அப்துல்லாவைக் கண்டுபிடித்துத் தரக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

ஜம்மு காஷ்மீர் இரண்டாகப் பிரிக்கப்பட்ட அறிவிப்பு வெளியான நாள் முதல் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே மதிமுக சார்பில் சென்னை நந்தனத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில், பரூக் அப்துல்லா கலந்துகொள்வார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த நிலையில் பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்துத் தரக் கோரி வைகோ தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் நேற்று ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதாக பரூக் அப்துல்லா ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால், இதுவரை அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. எனவே பரூக் அப்துல்லாவை உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார்.

அண்ணா பிறந்தநாள் விழா மாநாட்டுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், இவ்வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டுமென இன்று (செப்டம்பர் 12) நீதிபதி ரமணா அமர்வில் வைகோ தரப்பிலிருந்து முறையிடப்பட்டது. ஆனால், இம்மனுவை உடனடியாக விசாரிக்க ரமணா அமர்வு மறுத்துவிட்டது. மேலும், வழக்கை எப்போது விசாரிக்க வேண்டும் என்பது குறித்து தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என்றும் ரமணா அமர்வு தெரிவித்துவிட்டது

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon