மின்னம்பலம் மின்னம்பலம்
சனி, 6 ஜுன் 2020

அமமுகவில் கிச்சன் கேபினட்: தேளாய் கொட்டும் தேனி கர்ணன்

அமமுகவில் கிச்சன் கேபினட்: தேளாய் கொட்டும் தேனி கர்ணன்

மின்னம்பலத்தின் சொன்னதும் சொல்லாததும் நிகழ்ச்சியில், அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர், தேனி கர்ணன் கலந்து கொண்டு சிறப்பு பேட்டி அளித்தார்.

அமமுக கட்சியில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும், அதிமுக கட்சியின் பிளவு குறித்தும் பல தகவல்களை அவர் வெளிப்படுத்தினார். நமது கேள்விகளுக்கு பதிலளித்து அவர் உரையாற்றும் போது, ‘நாங்கள் பரம்பரை பரம்பரையாக அதிமுகவில் பணியாற்றி வந்தவர்கள், அதிமுக ரத்தம் என்றே கூறலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இருந்த காலத்திலேயே நான் மாவட்ட அளவிலான பொறுப்பு வாங்கியவன்.

அம்மாவின் மறைவுக்குப் பிறகு அந்த இடத்தை நிரப்ப தகுதியானவர் சின்னம்மா அவர்களே. அவரால் மட்டுமே அந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்ற ஒத்த கருத்தோடு அவரது பின்னால் நாங்கள் பயணித்தோம். ஆனால் அவர் சிறை செல்லும் சூழல் ஏற்பட்டது. அவ்வாறு அவர் சிறை செல்லும் முன்பு ஒரு மிகப்பெரிய தவறு செய்துவிட்டார். அந்தத் தவறு என்னவென்றால் 14 வருடங்கள் கட்சித் தலைமையினால் ஒதுக்கி வைக்கப்பட்ட டிடிவி தினகரனை துணைப் பொதுச் செயலாளராக மாற்றியது தான். இல்லையென்றால் இன்று அதிமுக மூன்று அல்லது நான்கு அணிகளாக இவ்வாறு பிளவுபட்டிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

இருப்பினும் சின்னம்மா அவர்கள் சொல்வதையே தாங்கள் செய்ய வேண்டும் என்பதால், அவர் கூறுவதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தொடர்ந்து பயணித்தோம். திடீரென்று தேர்தல் வந்தபோது தினகரனும் சிறை செல்ல நேர்ந்தது. அப்போது கூட புகழேந்தி தலைமையில் தான் தினகரன் சிறைக்கு செல்வதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஒவ்வொரு மாவட்ட வாரியாக தினகரனுக்கு ஆதரவாக, மத்திய அரசையும் மாநில அரசையும் எதிர்த்து நடந்த அந்த ஆர்ப்பாட்டத்தில், வெற்றிவேல், சி.ஆர்.சரஸ்வதி, பழனியப்பன், தங்கதமிழ்செல்வன், செந்தில் பாலாஜி என ஒருவரும் கலந்து கொள்ளவில்லை. புகழேந்தி கூறியது போன்று தினகரனை அடையாளப்படுத்தியது நாங்கள்தான்’ என்று அவர் கூறினார்.

மேலும், கட்சியே வேண்டாம் என்று ஒதுங்கியவரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வந்து ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயிக்க வைத்தோம். ஆனால் ஆர்கே நகர் தேர்தலில் வெற்றிபெற்ற உடனே தினகரன் தனது முழு நடவடிக்கையையும் மாற்றிக் கொண்டார். அவர் தன்னைத்தானே அம்மாவாக பாவித்துக் கொண்டு செயல்பட ஆரம்பித்தார். அந்த மாற்றத்தாலும் அதனால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவும் நான், நாஞ்சில் சம்பத், குண்டுகல்யாணம் என அனைவரும் கட்சியை விட்டு வெளியேறினோம். தற்போது புகழேந்தியும் வெளியேறிவிட்டார். அதுமட்டுமின்றி பெயர் தெரியாத எத்தனையோ பேர் கட்சியிலிருந்து வெளியே வந்து விட்டார்கள், என்று உணர்ச்சிகரமாக பதிலளித்தார்.

மரியாதை இல்லை என்ற ஒரு காரணத்தினாலேயே தினகரன் மீது அத்தனை அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஒரு கட்சியை நிர்வாகம் செய்யக் கூடிய தகுதி தினகரனுக்கு இல்லை. அமமுகவில் கிச்சன் கேபினட் தான் ஓடிக்கொண்டிருக்கிறது. இவரது மனைவி கிச்சனிலிருந்து ஒரு முடிவெடுப்பார்கள். ஜனா ஒரு முடிவெடுப்பார். இவ்வாறு அவர்களே தங்களுக்குள் குழப்பிக் கொண்டு கட்சி நிர்வாகிகளை அவமானப்படுத்துவார்கள், என்று அமமுகவின் இன்றைய சூழலைத் தெளிவுபடுத்தினார்.

‘சின்னம்மா சசிகலா அவர்கள் சிறையிலிருந்து வந்த பிறகு இவை அனைத்திற்கும் தீர்வு கிடைக்கும். பிளவுபட்டுள்ள கட்சிகள் இணைந்து மீண்டும் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகும். மறுபடியும் அதிமுக ஆளும் கட்சியாக மாறும்.

அதிமுக ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்றோ, திமுகவுடன் உடன்படிக்கை வைக்க வேண்டும் என்றோ எந்தவொரு எண்ணமும் எங்களுக்கு இல்லை. ஒரு காலத்திலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது. அதற்கான முகலட்சணம் அவருக்கு கிடையாது’ என்று அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில செய்தித் தொடர்பாளர், தேனி கர்ணன் தனது பேட்டியின் கூறினார்.

அவர் மின்னம்பலத்திற்கு அளித்த பேட்டியின் முழு வீடியோ கீழே இடம்பெற்றுள்ளது.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon