மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 12 ஆக 2020

கெளதம் மேனனுக்கு ஜெ.தீபக் எச்சரிக்கை!

கெளதம் மேனனுக்கு ஜெ.தீபக் எச்சரிக்கை!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கைத் தழுவலான ‘குயின்’ வெப் சீரிஸை இயக்கி வரும் கெளதம் வாசுதேவ் மேனனுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ. தீபக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பல படங்கள் உருவாவதாக அறிவிக்கப்பட்டன. ஏ.எல். விஜய் இயக்கத்தில் கங்கணா ரனாவத் நடிப்பில் தலைவி, பிரியதர்ஷினி இயக்கத்தில் நித்யாமேனன் நடிப்பில் தி அயர்ன் லேடி ஆகிய படங்கள் ஜெயலலிதாவின் ‘பயோபிக்காக ஆரம்பக்கட்ட நிலைகளில் இருக்கின்றன.

இந்நிலையில் கௌதம் மேனன், பிரசாத் முருகேசன் இணைந்து இயக்க, ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் வெப் சீரிஸின் ஃபர்ஸ்ட் லுக் செப்டம்பர் 7ஆம் தேதி அன்று வெளியாகியது. மைக் முன் பெருந்திரளான கூட்டத்தின் முன் உரையாற்றும் அரசியல் தலைவர் போல ரம்யா கிருஷ்ணன் நின்றிருக்கும் இந்த போஸ்டர், சமூக வலைதளங்களிலும் அதிகமாகப் பகிரப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகனான ஜெ.தீபக் இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

''ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து 'குயின்' என்ற வெப் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். என் அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ’தலைவி’ என்ற பெயரில் தான் எடுத்து வரும் படத்தின் கதையை என்னிடம் கூறிய இயக்குநர் விஜய் படத்தைத் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழும் பெற்றுச் சென்றார்.

இந்த சூழலில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித்துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம். யார் ’குயின்’ என்பதை கௌதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்''. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கும் தலைவி படம் முழுக்கவே ஜெயலலிதாவின் பயோபிக் ஆக உருவாகவிருக்கிறது. ஆனால், குயின் படக்குழு, ‘ ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றுப் படமாக இல்லாமல் அவரது வாழ்க்கைத் தழுவலாகவும், முற்றிலும் புனைவாகவும் குயின் உருவாகவுள்ளது என முன்னரே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வியாழன், 12 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon