மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

கிச்சன் கீர்த்தனா: கைக்குத்தல் அவல் லட்டு

கிச்சன் கீர்த்தனா: கைக்குத்தல் அவல் லட்டு

இன்று பிறந்துள்ள கன்யா மாதமான புரட்டாசி பெருமாளுக்குரிய மாதம். நவராத்திரி தொடங்கும் அற்புத வெற்றி கொடுக்கும் மாதமும் இதுவே. கேதார கௌரி விரத ஆரம்பம், ஸித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், மகாலட்சுமி விரதம், அமுக்தாபரண விரதம், ஜேஷ்டா விரதம், சஷ்டி - லலிதா விரதம், கபிலா சஷ்டி விரதம், மஹாளய பட்ச ஆரம்பம் என விரதங்கள் அதிகம் அனுஷ்டிக்கப்படும் மாதமும் புரட்டாசியே.

ஒரு பிடி அவலுக்கு குசேலனுக்கு செல்வ வளங்களையெல்லாம் அள்ளித்தந்த அந்த மாதவனை எண்ணி புரட்டாசி சனிக்கிழமைகளில் இந்தக் கைக்குத்தல் அவல் லட்டுவைச் செய்து சமர்ப்பிப்பது சிறப்பானது. கைக்குத்தல் அவல் உடல் உறுதிக்கு நலம் சேர்ப்பதும்கூட.

என்ன தேவை?

கைக்குத்தல் அவல் - 200 கிராம்

பொடியாக நறுக்கிய தேங்காய் - கைப்பிடி அளவு

பேரீச்சைத் துண்டுகள் - கைப்பிடி அளவு

ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்

வெல்லம் - 100 கிராம்

வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்

நெய் - 50 கிராம்

எப்படிச் செய்வது?

நறுக்கிய தேங்காயை ஒரு டீஸ்பூன் நெய்யில் வதக்கி எடுத்துக்கொள்ளவும். அகன்ற பாத்திரத்தில் மீதி நெய் சேர்த்து சூடானதும் அவலை நன்கு வறுக்கவும். வறுத்த அவலுடன் வறுத்த தேங்காய், ஏலக்காய்த்தூள், பேரீச்சைத் துண்டுகள், வெண்ணெய் சேர்த்து நன்கு கிளறவும். வேறொரு பாத்திரத்தில் வெல்லம், தேவையான அளவு நீர் சேர்த்து லேசான சூட்டில் தேன் பதத்துக்குக் காய்ச்சவும். இதில் அவல் கலவையைச் சேர்த்துக் கிளறவும். மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து பெருமாளுக்குப் படைக்கவும்.

குறிப்பு:

மேலும் சுவையாகச் செய்ய விரும்பினால் வறுத்த வேர்க்கடலை அல்லது முந்திரியை உடைத்து சேர்க்கலாம்.

நேற்றைய ரெசிப்பி: முட்டை குழம்பு

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது