மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

சைக்கிள் சிறுவனுக்கு அபராதமா? நடந்தது என்ன?

சைக்கிள் சிறுவனுக்கு அபராதமா?  நடந்தது என்ன?

சைக்கிளில் வந்த பள்ளி மாணவரை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வெளியானது.

அந்த வீடியோவில் சைக்கிளில் வரும் மாணவரை காவலர் ஒருவர் தடுத்து நிறுத்துகிறார். சாலை விதிகளை மீறும் பைக்குகளைப் போன்று மாணவரின் சைக்கிளையும் பூட்டு போட்டு சாவியைக் கையோடு எடுத்து செல்கிறார் அந்த காவலர். பின்னர் மாணவரை ஒரு மணி நேரம் அங்கேயே காத்து நிற்க வைக்கிறார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த மாணவர் ஹெல்மெட் அணியாமல் சைக்கிள் ஓட்டியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறி பல முன்னணி பத்திரிகைகளும் செய்தி வெளியிட்டது.

ஆனால் சைக்கிளில் சென்ற மாணவனை காவலர்கள் வழிமறித்து, ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதித்தாக கூறப்படும் சம்பவத்தின் உண்மை நிலவரம் தெரியவந்துள்ளது.

திருத்தப்பட்ட மோட்டார் வாகனச்சட்டம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் வாகன ஓட்டிகளை தீவிரமாக சோதனை செய்வதோடு, போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதித்து வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்தில் ஏரியூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரான சுப்பிரமணி தலைமையிலான காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகன ஓட்டிகளை நிறுத்தி ஆவணங்களை சரிபார்த்துக் கொண்டிருந்தனர், அப்போது அந்த வழியாக சைக்கிளில் வந்த மாணவர் ஹேண்ட் பாரை பிடிக்காமல் இரு கைகளையும் விட்டு வேகமாக சைக்கிள் ஓட்டி சாலையில் சாகசம் செய்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவரை எச்சரிக்கும் விதத்தில் அந்த காவலர் அவரை விசாரித்ததாகவும் தெரிகிறது. ஒரு மணி நேரம் மாணவரை காக்க வைத்து மாணவரின் உறவினர் வந்த பின்னர் அவரை எச்சரித்து அனுப்பியதாகவும் காவலர்கள் கூறுகின்றனர்.

அந்த மாணவன் கூறும் போதும், தான் சைக்கிளில் வந்து கொண்டிருக்கும் போது திடீரென சட்டை பட்டன் கழன்றதால் அதை மாட்டுவதற்காக கைகளை விட்டு சைக்கிள் ஓட்டியதாகவும், அதை பார்த்த காவலர்கள் தன்னை எச்சரித்து அனுப்பினார்கள், மற்றபடி எந்த விதமான அபராதமும் தனக்கு விதிக்கவில்லை என்று கூறி தெளிவுபடுத்தினார்.

இந்த சம்பவத்தைத் தான் உண்மை நிலவரத்தை சற்றும் விசாரிக்காமல், தங்கள் விருப்பத்திற்கு கதை கூறி வந்தனர். எல்லா காவலர்களும் மனசாட்சியற்றவர்கள் என்பது போன்ற ஒரு கண்ணோட்டத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தி வருகின்றனர்.

அதே போன்று மற்றொரு சுவாரசியமான வீடியோவும் இணையத்தில் உலா வருகிறது. போக்குவரத்து காவலர் ஒருவர் சாலையை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். அபோது எதிரில் லாரி வருவதையும் பொருட்படுத்தாமல் சிறுவன் ஒருவன் சைக்கிளில் சாலையைக் கடக்க முயல்கிறார். இதனைப் பார்த்த அந்த காவலர் வேகமாக செயல்பட்டு அந்த மாணவரின் சைக்கிளைத் தடுத்து நிறுத்தி அந்த சிறுவனின் தலையில் செல்லமாக கொட்டுகிறார். இப்படியும் சில காவலர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon