மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

இந்தியாவில் இ-சிகரெட்டுக்குத் தடை!

இந்தியாவில் இ-சிகரெட்டுக்குத் தடை!

நாட்டில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் இன்று (செப்டம்பர் 18) தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். அப்போது இன்று நடைபெற்ற கூட்டத்தில் நாடு முழுவதும் இ-சிகரெட்டுகளை தடை செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், இ-சிகரெட்டுகள் மற்றும் அதுபோன்ற தயாரிப்புகள் மக்களுக்குக் குறிப்பாக இளைஞர்களுக்குச் சுகாதார ஆபத்தை ஏற்படுத்துவதால், அதனைத் தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி இ-சிகரெட் உற்பத்தி, இறக்குமதி / ஏற்றுமதி, போக்குவரத்து, விற்பனை, விநியோகம், சேமிப்பு மற்றும் விளம்பரம் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் அறிக்கையில் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த தடையை மீறினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். முதல் தடவையாக பிடிபட்டால் ஓராண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் மீண்டும் இந்த தடையை மீறியது கண்டறியப்பட்டால் 3ஆண்டு சிறைத் தண்டனையுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அதுபோன்று இ-சிகரெட்டுகளை சேமித்து வைத்தால் ஆறு மாத சிறை தண்டனை அல்லது ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

உலகில் புகையிலை பயன்படுத்துபவர்களில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது (268 மில்லியன்). இவர்களில், புகையிலை தொடர்பான நோய்களால் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 12 லட்சம் பேர் இறக்கின்றனர். இதனால் இந்தியாவில் அனைத்து விதமான புகையிலை பொருட்களுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சரைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் ஜவடேகர், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் உற்பத்திசார் ஊக்கத் தொகை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஊக்கத்தொகை அறிவிப்பு மூலம் ரயில்வேயில் 11 லட்சம் ஊழியர்கள் பயன் பெறுவர். இதனால் அரசுக்குக் கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்” என்று கூறியுள்ளார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon