மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

மாணவர் நீக்கம்: பல்கலைக்கு நோட்டீஸ்!

மாணவர் நீக்கம்: பல்கலைக்கு நோட்டீஸ்!

மாணவர் கிருபா மோகன் நீக்கம் தொடர்பாக சென்னை பல்கலைக் கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை பெளத்தம் படித்துவந்தவர் மாணவர் கிருபா மோகன். எலிஜிபிலிட்டி சான்றிதழ் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி அவரை கடந்த 28ஆம் தேதி பல்கலைக் கழக நிர்வாகம் நீக்கியது. ஆனால், தனது நீக்கத்துக்கு காரணம் ஆளுநர் மாளிகையிலிருந்து வந்த அழுத்தம்தான் என்று கிருபா மோகன் குற்றம்சாட்டினார்.

இந்த நிலையில் பல்கலைக் கழகத்திலிருந்து நீக்கப்பட்டதற்கு எதிராக கிருபா மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று (செப்டம்பர் 18) விசாரணைக்கு வந்தது. மாணவர் சார்பாக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜரானார்.

அவர் தனது வாதத்தில், “மாணவர் எந்த விதியை மீறியிருக்கிறார் என கல்லூரியின் நீக்க உத்தரவில் கூறப்படவில்லை” என்று குறிப்பிட்டார். எவ்வித காரணமும் தெரிவிக்காமல் மாணவருக்கு கல்வி மறுத்த சென்னைப் பல்கலைக்கழகத்தின் உத்தரவு சட்டவிரோதமானது, உள்நோக்கமுடையது என்ற அவர், “இது மேலிடத்தின் அழுத்தம் காரணமாகவும், யாரையோ திருப்திப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்ட உத்தரவு” எனவும் வாதத்தினை எடுத்துவைத்தார்.

இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பாக சென்னை பல்கலைக் கழகம் வரும் 24ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, அன்றைய தினமே இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon