மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, ஞாயிறு, 5 ஜூலை 2020

பாலாறு அலுவலகம் இடமாற்றமா? பதறும் வேலூர்

பாலாறு அலுவலகம்  இடமாற்றமா? பதறும் வேலூர்

பாலாற்றில் ஆந்திர அரசு எத்தனை தடுப்பணைகள் கட்டியும், அதை முன்கூட்டியே தடுக்கத் தவறியதாக தமிழக அரசு மீது புகார்களும் விமர்சனங்களும் எழுந்து வரும் நிலையில், பாலாறு வடி நிலக்கோட்ட அலுவலகத்தையே வேலூரில் இருந்து திருவண்ணாமலைக்கு இடம் மாற்ற முயற்சி நடப்பதாக அதிர்ச்சிப் புகார் ஒன்றை நமக்கு அனுப்பினார் பாலாற்று ஆர்வலர் அம்பலூர் அசோகன்.

“மின்னம்பலத்துக்கு அனுப்பிய இந்த அவசர கடிதத்தை தமிழக முதல்வர், பொதுப் பணித்துறை செயலாளர், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர், வேலூர் பொதுப்பணித்துறை நிர்வாகப் பொறியாளர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளேன். தயவு செய்து பாலாறு வடிநிலக் கோட்ட அலுவலகம் வேலூர் மாவட்டத்தில் இருந்து பறிபோவதைத் தடுத்து நிறுத்துங்கள்” என்று நம்மிடம் வேண்டுகோள் வைத்தார் அசோகன்,

அவரிடம் இதுபற்றிப் பேசினோம்.

“கர்நாடக மாநிலம் நந்திதுர்கத்தில் ஆரம்பமாகும் பாலாறு, கர்நாடக மாநிலத்தில் 73 கிலோ மீட்டர் தூரமும், ஆந்திராவில் சித்தூர் மாவட்டம் குப்பம் வழியாக 33 கிலோ மீட்டரும் ஓடுகிறது. தமிழகத்துக்குள் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வட்டம் புல்லூர் கிராமத்தில் இருந்து பயணத்தைத் தொடங்கும் பாலாறு காஞ்சிபுரம் வழியாக கூவத்தூர் வரை 222 கிலோ மீட்டர் பயணிக்கிறது. இதில் வேலூர் மாவட்டத்தில் மட்டும் 150 கிலோ மீட்டர் தூரம் பாலாறு ஓடுகிறது. இது அப்பர் பாலாறு அதாவது மேல் பாலாறு என்று தமிழக பொதுப்பணித்துறையால் அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் பாலாற்றைக் கண்காணிக்கவும், பராமரிக்கவும் வேலுர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் மேல் பாலாறு அலுவலகம் அமைக்கப்பட்டது. இது பாலாறு படி நிலக் கோட்ட அலுவலகம் என்று அழைக்கப்படுகிறது. வேலூர் மாவட்டத்துக்குள் ஓடும் 150 கிலோ மீட்டர் நீள பாலாற்றினை பராமரிப்பது, மணல் திருட்டு நடைபெறாமல் கண்காணிப்பது ஆகியவை பாலாறு படி நிலக் கோட்ட அலுவலகத்தின் முக்கியப் பணிகள்.

கடந்த சில நாட்களாகவே பாலாறு படி நிலக் கோட்ட அலுவலகத்துக்குள் இருந்து வரும் தகவல்கள் அதிர்ச்சி தருபவையாக இருக்கின்றன. அதாவது, காட்பாடி காந்தி நகரில் இருக்கும் பாலாறு படி நிலக் கோட்ட அலுவலகத்தை திருவண்ணாமலையில் இருக்கும் தென்பெண்ணை ஆற்று அலுவலகத்துடன் இணைப்பதற்கான வேலைகள் தொடங்கியுள்ளன என்கிறார்கள் அந்த அலுவலகத்தில் உள்ளவர்கள்.

வேலூர் மாவட்டத்தில் இருக்கும்போதே பாலாற்றை சரியாக கண்காணிக்காத பாலாறு அலுவலகத்தை, திருவண்ணாமலைக்கு மாற்றினால் பாலாற்று வளங்களைக் கூறு போட்டுத் திருடுபவர்களுக்கு இன்னும் ஏதுவாக அமைந்துவிடும். மேலும் ஆந்திர அரசோடு பாலாறு விவகாரத்தில் பல பிரச்சினைகள் இருக்கும் நிலையில் பாலாறுக்கென தனி படிநிலக் கோட்ட அலுவலகம் செயல்பட வேண்டும்.

எனவே பாலாறு படி நிலக் கோட்ட அலுவலகம் தொடர்ந்து காட்பாடியிலேயே இயங்க விட வேண்டும். வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்ட அறிவிப்பு நடைமுறைக்கு வரும்போது இந்தக் கோட்ட அலுவலகத்தை திருப்பத்தூர் மாவட்டத்தில் வைக்கலாம். மாறாக ஒரேயடியாக திருவண்ணாமலைக்கு பாலாறு அலுவலகத்தைக் கொண்டு செல்ல முயற்சி நடப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது” என்கிறார் அம்பலுர் அசோகன்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon