மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 26 மே 2020

tags:1,

tags:1,

மோடியின் மனைவிக்கு சேலை கொடுத்த மம்தா

பிரதமர் மோடியும், மம்தா பானர்ஜியும் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் இரு துருவங்களாகச் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு டெல்லி சென்ற மம்தா பானர்ஜி பிரதமரின் குடியிருப்பில் அவரைச் சந்தித்தார். முதலில் பிரதமருக்குப் பூங்கொத்து கொடுத்தார். இதனைத் தொடர்ந்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு, இந்தியைத் தேசிய மொழியாக்கும் பிரச்சினை, பொதுத் துறை வங்கிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. சந்திப்பைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, மேற்கு வங்க மாநிலத்தின் பெயரைப் பங்களா என்று மாற்றுவது குறித்து பிரதமருடன் விவாதித்தேன். அவரும் அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தை மாநிலத்துக்குப் பயனளிக்கும் வகையில் அமைந்தது. வேலையின்மை பிரச்சினை குறித்தும் எடுத்துரைத்தேன். மேற்கு வங்கத்தில் அமையவுள்ள உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி சுரங்க தொடக்க விழாவுக்காகப் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தேன். இந்த சந்திப்பின் போது என் ஆர் சி விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. இது அரசியல் ரீதியான சந்திப்பு இல்லை”என்று மம்தா பானர்ஜி கூறினார். மேலும் நேரம் ஒதுக்கினால் உள்துறை அமைச்சர் அமித்ஷா வையும் சந்திக்க இருப்பதாக அவர் குறிப்பிட்டார்,

மோடியைச் சந்திப்பதற்காக நேற்று கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார் மம்தா. அப்போது விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் மனைவியான ஜசோதா பென்னை சந்தித்துள்ளார். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர். அப்போது மம்தா பானர்ஜி ஜசோதா பென்னுக்கு சேலையைப் பரிசாக வழங்கினார். அவருடன் வந்தவர்களுக்கு இனிப்பும் வழங்கினார். பின்னர் இருவரும் சில நிமிடங்கள் பேசியுள்ளனர்.

ஓய்வு பெற்ற ஆசிரியரான ஜசோதா பென், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கல்யாணேஸ்வரி கோயிலில் வழிபட 2 நாள் பயணமாக வந்துள்ளார். தொடர்ந்து, வழிபாட்டை முடித்த அவர் மீண்டும் கொல்கத்தா வழியாக குஜராத் திரும்புகையில் மம்தா பானர்ஜியை சந்தித்துள்ளார். இவரது சந்திப்பைத் தொடர்ந்து மம்தா டெல்லி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக மோடி திருமணம் ஆனவரா இல்லையா என்ற சந்தேகம் பரவலாக இருந்தது. ஆனால் 2014 தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் தன் மனைவி பெயர் ஜசோதா பென் என்று குறிப்பிட்டு தன் மீதான ஊகங்களுக்கு மோடி முற்றுப்புள்ளி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon