மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

எல்லை மீறிய சீரியல் வன்முறை: சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்!

எல்லை மீறிய சீரியல் வன்முறை: சன் டிவிக்கு 2.5 லட்சம் அபராதம்!

சன் டிவி கல்யாண வீடு சீரியலில், ஒளிபரப்பான கூட்டு வல்லுறவு காட்சிக்கு ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் கவுன்சில் (பி.சி.சி.சி) 2.5 லட்சம் அபராதம் விதித்திருக்கிறது.

தமிழ் நாட்டில் சீரியல்களுக்கு பெயர் பெற்றது சன் டிவி. திங்கள் முதல் சனிக்கிழமை வரை ‘பிரைம் ஸ்லாட்’ என அழைக்கப்படும் அதிகம் பேரால் பார்க்கப்படும் சமயத்தில், அதாவது இரவு 7.30 மணிக்கு கல்யாண வீடு எனும் சீரியல் ஒளிபரப்பாகிறது. இந்த ஆண்டு மே 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த மெகா சீரியல் ஒளிபரப்பப்பட்டது. அதில் வில்லியாக வரும் ரோஜா, தனது சொந்த சகோதரியையே பாலியல் பலாத்காரம் செய்ய நான்கு ஆண்களை பணம் கொடுத்து அனுப்புவது போல காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது.

அப்போது ரோஜா பேசும் வசனம், "கவனமாக கேளுங்கள். நீங்கள் பாலியல் பலாத்காரம் செய்யப் போகும் பெண் திருமணமாகாதவள், கன்னி. நீங்கள் அவளை பாலியல் பலாத்காரம் செய்யும்போது, உங்கள் இதயத்தில் இரக்கமோ பரிதாபமோ இருக்கக்கூடாது. எங்களுக்கு பணம் கொடுத்த ரோஜா மேடத்தின் சகோதரிக்கு நாங்கள் இதைச் செய்கிறோம் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. பரிதாபம் இருக்கக்கூடாது. அவள் எவ்வளவு கதறினாலும், பரிதாபமோ, தயவோ, கருணையோ இருக்கக்கூடாது. புரிகிறதா?" எனக் கேட்கிறாள்.

அதைக் கேட்ட கும்பல் தலைவன் செல்வம், “ரோஜா மேடம், நீங்கள் சொன்ன அனைத்தையும் நான் கேட்டு என் மனதில் பதிய வைத்து விட்டேன். அது அனைத்தும் உங்கள் சகோதரிக்கு என்று நீங்கள் நினைத்தீர்களா? நீங்கள் விவரித்த அனைத்தும் உங்களுக்குத் தான் நடக்கப் போகிறது” என ரோஜாவிடம் கூறுகிறான். பின்னர் அவன், ரோஜாவை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, தனது உதவியாளர்கள் ஒவ்வொருவராக அழைத்து அதே போல செய்யச் சொல்கிறான்.

ஜூன் 28ஆம் தேதி ஒளிபரப்பான மற்றொரு எபிசோடில், ரோஜாவை சீரழித்த ஆண்களை பழிவாங்கும் விதமாக அவர்களது பிறப்புறுப்பை எரித்து விட வேண்டும் என ராஜா என்பவன் திட்டம் தீட்டுகிறான். வீட்டில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் ஒரு பிரபல சீரியலில் தான் இப்படிப்பட்ட காட்சிகள் ஒளிப்பரப்பாகியிருக்கின்றன.

இந்த சீரியலை திரு பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அதன் நிர்வாக இயக்குநர் எம்.திருமுருகன் தான் கல்யாண வீடு மெகா சீரியல் இயக்குநரும் அதன் கதாநாயகனும்.

பல பார்வையாளர்கள் புகார் செய்தபின், பி.சி.சி.சி இந்த விஷயத்தை தீவிரமாக எடுத்துக் கொண்டது. மேலும் சம்பந்தப்பட்ட எபிசோடுகள் சேனலின் சன்நெக்ஸ்ட் பயன்பாட்டிலிருந்தும் அகற்றப்பட்டுள்ளன. இருப்பினும், 1 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்ட திரு பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல், இந்த மோசமான வல்லுறவுக் காட்சிகளின் கிளிப்பிங்கைக் கொண்டுள்ளது.

புகார்களின் அடிப்படையில், பி.சி.சி.சி ஜூன் 27 அன்று சன் டிவிக்கு நோட்டீஸ் அனுப்பியது, ஆகஸ்ட் 23 அன்று விசாரணை நடைபெற்றது. சன் டிவியும் திரு பிக்சர்சும் தங்கள் தரப்பு வாதங்களை வைத்தனர்.

சன் டிவி, "குடும்பம் மற்றும் பெண்களின் தார்மீக விழுமியங்களையும் நல்ல நெறிமுறைகளையும் வலியுறுத்தும் ஒரு கற்பனையான குடும்பம் சார்ந்த சீரியல் இது" என்று கூறியது. மேலும் சம்பந்தப்பட்ட எபிசோடுகள் வில்லத்தனமான பெண் கதாபாத்திரத்தின் தீய தன்மையையே சித்தரித்தன என்றும் கூறியது.

அந்த எபிசோடிலுள்ள வசனங்கள் "மோசமான மற்றும் ஆபாசமானவை" அல்ல என்பதை உறுதிப்படுத்த அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் சேனலால் எடுக்கப்பட்டன என்றும் சன் டிவி தரப்பில் கூறப்பட்டது. திரு பிக்சர்ஸ் தயாரிப்பாளர் புகார்தாரர்கள் தங்கள் தொடரை முழுமையாகப் பார்க்காமல் புகாரளிக்கின்றனர் என்று வாதிட்டார்.

எபிசோடுகளை மறுபரிசீலனை செய்தபின், அவை ஒழுங்குமுறை அமைப்பு விதித்த பல விதிகளை மீறியுள்ளதாக பி.சி.சி.சி உறுதிப்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் கவுன்சில் (பி.சி.சி.சி) சன் டிவி சேனலுக்கு ரூ .2.5 லட்சம் அபராதம் செலுத்தவும், கல்யாண வீடு சீரியல் வரும் செப்டம்பர் 23 முதல் 28ஆம் தேதி வரை, தொடர்ந்து ஆறு நாட்கள் ஒளிபரப்பப்படுவதற்கு 30 விநாடிகளுக்கு முன்பே பதிவு செய்யப்பட்ட மன்னிப்பு காட்சிகள் அடங்கிய கிளிப்புகள் ஒளிபரப்பவும் உத்தரவிட்டுள்ளது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon