மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 6 ஜூலை 2020

பாஜக எம்.பி.க்கு ஆதரவாக கி.வீரமணி

பாஜக எம்.பி.க்கு ஆதரவாக கி.வீரமணி

கர்நாடக மாநிலத்தில் தும்கூர் பகுதிக்கு அருகில் உள்ள சித்திர துர்கா பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாராயணசாமி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்பதால், அதே தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில், மற்ற பிற்படுத்தப்பட்ட ஜாதியர் - ‘கொல்லா’ என்றழைக்கப்படும் யாதவ் ஜாதியினர் அதிகம் உள்ள கிராமத்தின் உள்ளே நுழையவிடவில்லை.

இந்த விவகாரம் தேசிய அளவில் விவாதமாகிவரும் நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தீண்டாமையால் பாதிக்கப்பட்ட பாஜக எம்.பி.க்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (செப்டம்பர் 18) வெளியிட்டுள்ள செய்தியில், “நாராயணசாமி பா.ஜ.க. எம்.பி., மாநிலத்திலும், மத்தியிலும் பா.ஜ.க. ஆளுகிறது என்ற நிலைமை இருக்கும்போதே, 2019 இல் இந்த ஜாதி வெறிக் கொடுமை சகிக்கப்படலாமா? தீண்டாமை ஒழிப்புச் சட்டம் குறட்டை விடுகின்றதா?

மனித சமத்துவத்திற்கு எதிரானவர்களை - அவர்கள் எந்த ஜாதியினராக இருந்தாலும், எந்தப் பிரிவினராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். தீண்டாமை ஒழிப்புச் சட்டம் இப்படி குறட்டைவிட்டுத் தூங்கலாமா? அந்த எம்.பி., புகார் கொடுக்கப் போனபோது, எஃப்.ஐ.ஆர். போடவும்கூட விருப்பமின்றி நடந்துள்ளது பயமா? அல்லது வாக்கு அரசியலா? எவ்வளவு சட்டங்கள் இருந்தும் என்ன பயன்?

அங்கு பெரியார் இயக்கம், ஜாதி ஒழிப்பு இயக்கங்கள் இருந்தால், இந்நிலை ஏற்பட்டிருக்குமா? பசவண்ணா போன்றவர்கள் பூமிதானே என்றாலும், இந்த இழிநிலையா?நம் குடியரசுத் தலைவரே பூரி கோவிலுக்குள் போக முடியவில்லையே! வெட்கம்! வேதனை!! வன்மையாகக் கண்டிக்கிறோம் - அரசுகள் வேடிக்கை பார்க்கக்கூடாது” என்று கூறியுள்ளார் கி.வீரமணி.

இந்நிலையில் தீண்டாமைக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நாராயணசாமி எம்பி, “அந்த கிராமத்தில் என்னை உள்ளே விடாததற்குக் காரணம் நான் மடிகா சாதி என்பதால்தான். அதாவது தாழ்த்தப்பட்ட சாதிகளிலேயே மற்ற சாதிகளை உள்ளே அனுமதிக்கிறார்கள். ஆனால் நான் அதிலும் கூட தாழ்ந்த சாதி என்று கூறி என்னை அனுமதிக்க மறுத்துவிட்டார்கள்” என்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon