மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, சனி, 30 மே 2020

ஆவினில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஆவினில் ஊழல்: சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஆவினில் நடைபெறும் ஊழல் குறித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்த வேண்டும் என்று பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் இன்று எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து மனு கொடுத்துள்ளது.

கடந்த 2ஆண்டுகளில் 300கோடி ரூபாய் வரை ஆவின் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகப் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர், ”ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருவதாக முதல்வர் கூறுகிறார். ஆனால் நல்ல லாபத்தில் இயங்குவதாகப் பால் வளத் துறை அமைச்சர் கூறுகிறார். இருவரின் கருத்தும் முரண்பாடாக இருக்கிறது. இதிலிருந்தே ஆவின் நிறுவனத்தில் ஊழல் நடந்திருப்பது தெரிய வருகிறது. எனவே ஆவின் லாபத்தில் இயங்குகிறதா அல்லது நஷ்டத்தில் இயங்குகிறதா என்பதை ஆராய அந்நிறுவனத்தின் இணையதளத்தை ஆராய்ந்தோம் . அதில், தற்போதைய நிர்வாக இயக்குநர் சி.காமராஜ் தலைமையில் ஆவின் நிறுவனம் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வரும் தகவல் தெரியவந்தது.

2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை ஆவின் நிர்வாக இயக்குநராக இருந்த சுனில் பாலிவால் அவரது பணிக்காலத்தின் கடைசி நிதியாண்டில் (2016-2017) சுமார் 5281கோடி ரூபாய் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டியதில், சுமார் 139.34கோடி ரூபாய் நிகர லாபத்தில் ஆவின் நிறுவனத்தைச் செயல்பட வைத்து வளர்ச்சிப் பாதையை நோக்கிப் பயணிக்க வைத்திருக்கிறார்.

ஆனால் ஆவின் நிறுவனத்தின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத திரைமறைவு சக்திகள் செய்த சதியால், ஆவின் நிறுவனத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்ற சுனில் பாலிவால் மாற்றப்பட்டு 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் சி.காமராஜை நிர்வாக இயக்குநராக நியமனம் செய்தது தமிழக அரசு.

அதன் பிறகு நிர்வாக இயக்குநராக சி.காமராஜ் பொறுப்பேற்ற முதல் ஆண்டில் அதாவது 2017-2018ஆம் நிதியாண்டில் சுமார் 5478கோடி ரூபாய் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டி சுமார் 27.96கோடி ரூபாயும், அதற்கடுத்த (2018-2019) நிதியாண்டில் சுமார் 5994கோடி ரூபாய் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் மூலம் வருவாய் ஈட்டி சுமார் 13.36கோடி ரூபாயும் ஆவின் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது.

2017-2018, 2018-2019ஆம் நிதியாண்டுகளை விட 2017-2016ஆம் நிதியாண்டில் குறைந்த அளவே விற்பனை மூலம் வருவாய் ஈட்டியிருந்தாலும் கூட சுனில் பாலிவால் ஆவின் நிறுவனத்தை சுமார் 139.34கோடி ரூபாய் நிகர லாபத்தில் செயல்பட வைத்திருந்தார்.

இந்நிலையில் ஆவின் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுனில் பாலிவால் காலகட்டத்தை விட சுமார் 300கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறது. ஆனால் துறை சார்ந்த அமைச்சரான ராஜேந்திர பாலாஜி தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறாரா? அல்லது தெரியாமல் இருக்கிறாரா என்பது தெரியவில்லை.

எனவே ஆவின் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 300கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தைச் சந்திக்க காரணமான அதிகாரிகள் யார்...? யார்...? அவர்களுக்கு உடந்தையாக இருந்தது யார்? என்பதைக் கண்டறிந்து, ஆவின் நிறுவனத்திற்கு இழப்பை ஏற்படுத்திய அதிகாரிகளிடம் அந்த இழப்பு தொகையை வசூலிக்கின்ற வகையில் தமிழக அரசு உடனடியாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அதுமட்டுமின்றி தற்போது தனது சுயநலத்திற்காக ஆவின் நிறுவனத்தைக் கூடுதல் நிதிச் சுமைக்கு உள்ளாக்கும் விதமாக செயல்பட்டு, ஆவினை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்லும் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ், விற்பனை பிரிவு மேலாளர் ரமேஷ் குமார் உள்ளிட்ட ஆவின் நிர்வாகத்தில் உள்ள அனைத்து தலைமை அதிகாரிகளை ஒட்டுமொத்தமாகவும், மற்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியையும் உடனடியாக பதவி நீக்கம் செய்வதோடு, ஆவின் நிறுவனத்திற்கு நேர்மையான, திறமையான ஐஏஎஸ் அதிகாரியை புதிய நிர்வாக இயக்குநராக நியமனம் செய்து உத்தரவிட்டு, ஆவின் நிறுவனத்தை அழிவிலிருந்து காத்திட வேண்டும்” என முதல்வருக்கு வலியுறுத்தியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஆவின் நிறுவனத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து சிபிஐ, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு உத்தரவிட அழுத்தம் கொடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நலச் சங்க தலைவர் பொன்னுசாமி தலைமையில் அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று (செப்டம்பர் 18) திமுக தலைவர் ஸ்டாலினிடம் மனு அளித்துள்ளனர்.

அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஊழல் குறித்து முறையிடத் திட்டமிட்ட நிலையில் முதலாவதாக ஸ்டாலினைச் சந்தித்து மனு கொடுத்துள்ளனர். அப்போது, ஆவின் நிறுவனத்தில் நடைபெற்று வரும் முறைகேடுகள், ஊழல்கள் மற்றும் நஷ்டம் குறித்து ஸ்டாலினிடம் எடுத்துரைக்கப்பட்டிருக்கிறது. ஆவின் நிர்வாக இயக்குநர் சி.காமராஜ், பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பால்வளத் துறை செயலாளர் கோபால் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள் அனைவரையும் பதவி நீக்கம் செய்யவும், அவர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை, சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிடத் தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஸ்டாலினைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரிடமும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டதாகப் பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

புதன், 18 செப் 2019

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon